தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்ற கருத்தரங்கம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள தமிழகம் ஆய்வு மாளிகையில் நடைபெற்றது. தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர், வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள் பங்கேற்று வனங்களின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசுகையில், “நமது வனங்களில் களைச் செடிகள், அந்நியத் தாவரங்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை அகற்ற மனித ஆற்றல் மற்றும் நிதி அதிகம் தேவைப்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இருந்தால், இந்த நிதியை வளர்ச்சிப் பணிக்கு பயன்படுத்தலாம். இதனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். வனத்தை அழித்தால் நாமும் அழிந்து விடுவோம். வனங்களைப் பாதுகாக்கவே நீதித்துறை உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தால் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படுகிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அவற்றை சீரமைக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிகளவில் நீர்நிலைகள் உள்ளன. ஆனால், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தண்ணீருக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவே வனம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இரண்டு துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்காவிட்டால் பேரழிவுகளைத் தவிர்க்க முடியாது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் அரசு முனைப்புடன் இருக்கிறது. சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் அவற்றை சீரமைப்பது முக்கியமாகும்” என்றார்.
இவரைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன், உயர்நீதிமன்ற நீதிபதி சதீஸ்குமார் ஆகியோரும் வனங்களின் அவசியம் குறித்து பேசினர்.