இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அடுத்த சில மாதங்களுக்கு தேவையான நிதி உதவிகளை பெறுவதற்கென்றால், வேறு ஒரு நாடு இலங்கைக்காக பிணையாக வேண்டிய அளவிற்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் இவ்வாறானதொரு நிலைமை ஒரு போதும் ஏற்பட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான கடன்களை பெறுவதற்கு வேறு நாடு இலங்கைக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என உலக வங்கி ஏற்கனவே கூறியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் இலங்கை
இவ்வாறான சவால்களை எதிர்கொள்வதற்கு அனைத்து கட்சி தரப்பினருடனும் இணைந்து செயற்பட வேண்டிய அமைச்சரவையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் வெளிப்படையாக கலந்துரையாடியதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இலங்கை, அடுத்த சில மாதங்களில் செலுத்த வேண்டிய அவசியமான டொலர்களை கண்டுபிடிக்க வேண்டிய மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டுள்ளது.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் இதுவரை முன்வைக்கப்பட்ட பொருளாதார திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து உலகின் நம்பிக்கையை அரசாங்கம் பெறவில்லை.
இவ்வாறான கடன்களைப் பெறுவதற்கு பொருளாதாரக் கொள்கை கட்டமைப்புகள் சரியாக வகுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“நாம் எதிர்கொள்ளும் மிகவும் ஆபத்தான நெருக்கடிக்கு ஜனாதிபதியே முதன்மையான பொறுப்பாகும். இதுபற்றி நானும் ஜனாதிபதியிடம் பேசினேன். இந்த நேரத்தில் எமக்கு தேவைப்படுவது நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அனைத்துக் கட்சி பிரதிநிதித்துவம் கொண்ட அமைச்சரவையாகும். ஆனால் இன்று அப்படி எதுவும் இல்லை.
பொருளாதார நெருக்கடி
மற்றொன்று, உருவாகும் அமைச்சரவை குறிப்பிட்ட திகதிகளுடன் திட்டவட்டமான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்க வேண்டும். தற்போது நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பான பல சீர்திருத்தங்கள் உள்ளன. இதற்கு ஒரு திட்டம் தேவை.
அதற்கமைய, செயல்பட்டால் தான் உலகம் ஏற்றுக்கொள்ளும். அப்படியொரு பின்னணியை ஜனாதிபதி உருவாக்கினால், நிதியமைச்சர் பதவியை ஏற்க கூட நான் தயார். இல்லையேல் பிரதமர் கூறியது போல் பண பலம் உள்ளிட்ட பொறுப்புகள் நாடாளுமன்றத்திற்கும் வரும் வகையில் மிகவும் திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும். அதனால்தான் நிதிக் குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்று இந்தப் பணியில் பங்களிக்க விரும்பினேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முதலுதவி செய்வதன் மூலம் காப்பாற்ற முடியாது எனவும் தீவிர சீர்திருத்தங்கள் உடனடியாக தேவை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.