சாலை விபத்தில் உயிரிழந்த குப்பை பொருட்களை சேகரிப்பவரின் சடலத்தை குப்பை லாரியிலேயே போலீஸார் ஏற்றிச் சென்ற செயல் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்கள் வாயிலாக பரவில் பலரது மத்தியில் கண்டனங்களுக்கும், விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளது.
புதன்கிழமையான (ஜூன் 1) இன்று காலை ஜோத்பூரின் பிரதாப்நகரில் உள்ள பரகதுல்லாகான் அரங்கத்துக்கு அருகே பேருந்து மோதிய விபத்தில் குப்பை சேகரிக்கும் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விவரம் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து வந்த போலீஸார், உயிரிழந்த குப்பை சேகரிப்பாளரின் உடலை ஏற்றிச் செல்ல டாக்ஸியை வர வைக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் டாக்சி வராததால் அங்கிருந்த குப்பை லாரியிலேயே சடலத்தை ஏற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.டி.எம். மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்திருக்கிறார்.
டாக்ஸி வராததால் உயிரிழந்தவரின் சடலத்தை குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டிருக்கிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் ராஜஸ்தான் போலீஸாரின் இரக்கமற்ற செயலை கண்டித்தும் மனிதநேயம் மரித்துவிட்டதா என்று வருத்தமும் தெரிவித்து வருகிறார்கள்.
விவகாரம் பூதாகரமான நிலையில் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்ரபோர்தி சிங்கிடம் ஜோத்பூர் காவல்நிலைய ஆணையர் நவ்ஜோதி கோகாய் ஆணையிட்டிருக்கிறார். இதனிடையே தேவ் நகர் காவல் நிலைய அதிகாரி ஜெய் கிஷன் சோனி இது தொடர்பாக பேசுகையில், “சம்பவம் நடந்த பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியதால் உடனடியாக சடலத்தை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே மாநகராட்சி குப்பை லாரியில் எடுத்தச் செல்லப்பட்டது” என்று கூறியிருக்கிறார். உயிரிழந்த குப்பை சேகரிக்கும் நபர் பிலாரா பகுதியைச் சேர்ந்த தேவ்ராஜ் ப்ரஜாபத் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM