விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவர், வேட்டைக்காரன்பட்டி எனும் பகுதியில் கல்குவாரி நடத்தி வந்துள்ளார். கடந்த 2010ம் ஆண்டு, இவரின் கல்குவாரியில், கல்லுடைக்கும் இருளர் சமூக பழங்குடி மக்கள் சிலர் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுவதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், 6 குழந்தைகள் உட்பட 13 குடும்பங்களை சேர்ந்த 35 பேரை மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக, அப்போதைய செஞ்சி தாசில்தார் சியாமலதா என்பவர் வளத்தி காவல் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற காவல்துறை அதிகாரிகள், கணேசன், அவரின் மகன் தமிழ்செல்வன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் SC/ST நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், கல்குவாரி உரிமையாளர் கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். சுமார் 11 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் முடிவில், தற்போது அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல் குற்றவாளியாக கருதப்பட்ட கணேசன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் தமிழ்செல்வனுக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15000 ரூபாய் அபராதத்தையும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார் நீதிபதி பாக்கியஜோதி.
சுமார் 11 வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கில், தற்போது நீதி வழங்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.