ஸ்ரீநகர் : ஜம்மு – காஷ்மீரில் ஹிந்து ஆசிரியை பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.ஜம்மு – காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள குல்காம் பகுதியில் வசித்தவர் ரஜினி பாலா, 36. கோபல்போரா அரசு பள்ளி ஆசிரியை. நேற்று காலை பள்ளிக்குள் புகுந்த, பயங்கரவாதிகள் ரஜினியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர்.
சக ஆசிரியர்கள் ரஜினி பாலாவை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.இச்சம்பவம் ஜம்மு – காஷ்மீர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி கூறுகையில், “ஜம்மு – காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி இருப்பதாக மத்திய அரசு கூறிவருகிறது. ”ஆனால், பொதுமக்கள் பீதியுடன் தான் வாழ்கின்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களே சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ”பா.ஜ.,வின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாகின்றனர்,” என்றார்.
ஜம்மு – காஷ்மீர் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் அல்தாப் தாக்குர் கூறுகையில், “ஆசிரியை படுகொலை செய்யப்பட்டது மிகவும் வேதனையான சம்பவம். இதை வன்மையாக கண்டிக்கிறோம். ரஜினி பாலா ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறோம்,”என்றார்.ஜம்மு – காஷ்மீரில் கடந்த இரு மாதத்தில், ஏழு பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இருவர் அரசு ஊழியர்கள். ஒரு போலீஸ் மற்றும் நான்கு பொதுமக்களும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
Advertisement