10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியுதவி – பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

சிம்லா: நான் பிரதமர் கிடையாது, ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் உறுப்பினர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியுதவியை அவர் வழங்கினார்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2019 தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, 2-வது முறையாக மோடி பிரதமரானார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைகிறது.

இதையொட்டி இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் நேற்று ஏழைகள் நல மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று மத்திய அரசின் 16 திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக பிரதமரின் விவசாயி நிதித் திட்டத்தின் 11-வது தவணை நிதி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

கடந்த கால ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒரு ரூபாய் ஒதுக்கப்பட்டால் 85 பைசா ஊழல்களில் மறைந்துவிடும். 15 பைசா மட்டுமே மக்களை சென்றடையும். ஆட்சி நிர்வாகத்தில் ஊழலும் ஓர் அங்கம் என்ற வகையில் அப்போதைய மத்திய அரசு செயல்பட்டது.

9 கோடி போலி பயனாளிகள்..

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஊழல் ஒழிக்கப்பட்டது. ஏழைகள், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிதியுதவி வழங்கப்படுகிறது. அந்தவகையில் சுமார் ரூ.2.25 லட்சம் கோடி ஊழல்வாதிகள், இடைத்தரகர்களுக்கு செல்வது தடுக்கப்பட்டு நிதியுதவி முழுவதும் மக்களை சென்றடைகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு நலத்திட்டங்களில் சுமார் 9 கோடி போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்.

என்னை எப்போதும் பிரதமராக கருதமாட்டேன். ஒவ்வொரு இந்தியகுடும்பத்திலும் நான் ஓர் உறுப்பினர் என்றே கருதுகிறேன். ஓர் அரசாணையில் கையெழுத்திடும் போது மட்டும் பிரதமராக செயல்படுவேன். அந்த அரசாணையை அமல்படுத்தும்போது இந்திய குடும்ப உறுப்பினராக மாறிவிடுவேன்.

மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சியில் 3 கோடி பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 50 கோடி பேர் பலன் பெறுகின்றனர். பல்வேறு மானிய திட்டங்களில் ஏழைகளின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் நிதி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் வறுமை குறைந்து வருகிறது. கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

தற்போது புதிய இந்தியாவை உருவாக்க மத்திய அரசு அயராது உழைத்து வருகிறது. கடந்த ஆட்சிகளைவிட தற்போது இந்திய எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன. சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக இந்தியா அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. வரலாறு காணாத வகையில் அந்நிய முதலீடு ஈர்க்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சி பயணத்தில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பிரதமரின் உரையை கேட்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

மோடியின் தாயார் ஓவியம்..

சிம்லாவில் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி பிரதமர் மோடியை வாழ்த்தினர். அப்போது பிரதமர் காரை விட்டு இறங்கி மக்களை நோக்கி கை அசைத்தவாறு 500 மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்றார். அப்போது அனு என்பவர் காண்பித்த ஓர் ஓவியத்தை வாங்கிப் பார்த்தார். அதில் தனது தாய் ஹீராபென்னின் ஓவியத்தை பார்த்து பிரதமர் மகிழ்ச்சியில் திளைத்தார். ஓவியத்தை வரைய எத்தனை நாட்களானது என்று பிரதமர் வினவ, ஒரே நாளில் வரைந்தேன் என அந்த பெண் கூறினார். அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.