2.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுள்ள அத்தியாவசிய மருந்துப் பொருட்களை பங்களாதேஷ் அரசாங்கம் இலங்கை சுகாதாரத் துறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
பங்காளதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் எம்.டி அரிபுல் இஸ்லாம் மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு சுகாதார அமைச்சில் நேற்று (31) இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரினால் மருந்துப்பொருட்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், வலிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான 79 அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கையின் தற்போதைய சூழ்நிலையில் இலங்கை சுகாதாரத் துறைக்கு உதவ முடிந்ததையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாக பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இலங்கையும் பங்களாதேஷும் நீண்டகாலமாக மிக நெருக்கமான மற்றும் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாகவும், பங்களாதேஷும் அதன் மக்களும் ஒரு பிராந்திய நாடாக இலங்கையுடன் மிகவும் நட்புடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இந்த மருந்துப் பொருட்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
கெஹலிய ரம்புக்வெல்ல, இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய உறவுடன் சுகாதாரத் துறையில் உயர் மட்ட உறவுகளும் மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளார்.