கொல்கத்தா : பிரபல திரைப்பட பின்னணி இசைப்பாடகர் கே.கே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 53. கொல்கத்தாவில் நடைபெற்ற பல்வேறு கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்ற கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் தங்கி இருந்த விடுதிக்கு திரும்பிய அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். கிருஷ்ணகுமார் குன்னத்தின் திடீர் மறைவிற்கு மாரடைப்பே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இறப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் கே.கே. பங்கேற்ற மேடை நிகழ்ச்சி வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் உட்பட பல்வேறு இந்திய மொழிகளில் கே.கே. பாடியுள்ளார். 1968ம் ஆண்டில் டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்த இவர், திரைப்படங்களுக்கு பின்னணி பாடல் பாடுவதற்கு முன்னதாக 3,500க்கும் மேற்பட்ட சிங்கிள்களுக்கு பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார். தொடர்ந்து 1999ம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக பாடல் பாடி இருந்தார் கே.கே. 1996 முதல் திரைப்பட பாடல்கள் பாடி வந்த கே.கே. ஏ. ஆர். ரஹ்மான் இசையில் தான் முதன் முறையில் திரையில் பாடியுள்ளார். தமிழ் திரைப்படங்களில் சுமார் 66 பாடல்களை அவர் பாடியுள்ளார். அவற்றுள் பெரும்பாலானவை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றவை.மின்சாரக்கனவு, செல்லமே, காக்க காக்க ,7ஜி ரெயின்போ காலனி, காவலன், மன்மதன், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, அந்நியன் ,ரெட் ,கில்லி உள்ளிட்ட பல்வேறு படங்களில் இவர் பாடியுள்ளார். கே.கே. வின் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரபல பாடகர் கே.கே. என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலித்தன. அவரது பாடல்கள் மூலம் நாம் எப்போதும் அவரை நினைவு கொள்வோம், ‘என்றார். அதே கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்,’என்றார்.