Rafael Nadal: உங்கள் இதயத்தை சீராக்க நடாலின் சடங்குகள் தேவை!

இரவு 1 மணி. தண்ணீர் பிடித்து பாட்டிலை மெத்தையின் அருகில் வைத்துவிட்டு படுத்தேன். நடால் vs ஜோகோவிச் போட்டி தொடங்கப்போகிறது. ஒவ்வொரு திசையிலும் தலையை வைத்து படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்தத் திசையில் ஆட்டம் நமக்குச் சாதகமாகச் செல்கிறது என்று தெரியவேண்டுமே. ஒரு பொசிஷனை முடிவு செய்து போட்டியைத் தொடர்ந்தால், சில சொதப்பல்கள். இப்போது எழுந்து அமர்ந்து, மீண்டும் ஒவ்வொரு பொசிஷனாக சோதித்துப் பார்க்கிறேன். லேப்டாப்பை வைக்கும் திசை, செல்போன் இருக்கும் தூரம், தலையணை இருக்கும் கோணம் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. இறுதியாக, அந்த வாட்டர் பாட்டிலையும் சிறிது சிறிதாகத் தள்ளிப் பார்க்கிறேன்.

நாலே கால் மணி நேரம் ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு நொடியும் பயமும், பரபரப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. தவளைகளும் உறங்கிப்போக, இரவின் நிசப்தத்தில் இதயம் துடிக்கும் சத்தம், சுவர்க் கடிகார முட்களைப் போல் கேட்டுக்கொண்டே இருந்தது. அவ்வளவு வேகமாக துடித்துக்கொண்டிருந்தது.

Rafael Nadal

எனக்கு மட்டுமல்ல, பல லட்சம் பேரின் நள்ளிரவோ, அதிகாலையோ இப்படித்தான் கழிந்திருக்கும். ரஃபேல் நடால் பெரீராவின் ரசிகர்களுடைய ஒவ்வொரு மேட்ச் டே-வும் இப்படித்தான் கழிந்திருக்கும். நடாலைப் பிடிக்காதவர்களுக்கு அவரின் சென்டிமென்ட் வழக்கங்கள் எரிச்சலூட்டலாம். ஏனெனில், அவை எல்லையற்றுச் செல்பவை.

அரங்கத்திற்குள் நுழைந்து துண்டுகளை அழகாக விரித்து வைத்துவிட்டு, அதனருகே டீ ஷர்ட்களையும் வைத்துவிட்டு, தன் எனர்ஜி டிரிங்கையும், தண்ணீர் பாட்டிலையும் அந்த கற்பனை வட்டத்திற்குள் பத்திரமாக வைத்துவிட்டப் பிறகுதான் நடாலின் டென்னிஸ் தொடங்கும். அதன்பிறகு எத்தனை முறை களத்தில் குதிக்கவேண்டும், எத்தனை முறை பந்தைத் தட்டவேண்டும் என எல்லாமே புரொக்ராம் செய்ததுபோல் நடக்கும்.

Federer and Me: A Story of Obsession புத்தகத்தை எழுதிய வில்லியம் ஸ்கிடில்ஸ்கி, நடாலின் அந்த வழக்கங்கள் எவ்வளவு எரிச்சலூட்டும் என்று எழுதியிருப்பார்.

“Nadal’s compulsion seem potentially limitless. Where does such behavior end? Is the pre-match ritual preceded by the pre pre-match ritual? At what point following the victory, the preparation for the next match begin? Is any portion of Nadal’s life not under the sway of some compulsion? Is the man capable of relaxing?” – இப்படியாக கேள்விகளை எழுப்பியிருப்பார் வில்லியம் ஸ்கிடில்ஸ்கி.

Rafael Nadal

ஒரு ஃபெடரர் ரசிகருக்கு இது எரிச்சலாக அமையலாம். ஆனால், ஈஃபிள் டவருக்கு அருகே களிமண்ணில் அரியணை செய்து, மகுடம் சூடி அமர்ந்திருக்கும் அந்த ‘களி’ மன்னனின் ரசிகர்களுக்கு அப்படி இருக்காது. அது அவர்களின் அன்றாடமாய் மாறிப்போயிருக்கும். சுமார் 15 ஆண்டுகளாக நடாலின் அந்த அசைவுகளை பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு இது வழக்கமாக மாறாவிட்டால்தான் ஆச்சர்யம்.

போட்டிக்கு முன்பான சடங்குகளையெல்லாம் விடுங்கள். அந்தக் கோர்ட்டுக்குள்ளும் எத்தனையோ விஷயங்கள் ஓயாமல் நடந்துகொண்டிருக்கும். விடாமல் அதைப் பார்த்துக்கொண்டே இருக்கும்போது, அது பழகிவிடும். பிடித்துவிடும். அதுவும் பிரெஞ்சு ஓப்பனில் அதைப் பார்ப்பது ஒருகட்டத்தில் உங்களுக்குப் பிடித்த ஓவியத்தை ரசிப்பதைப் போன்ற உணர்வையும் கொடுத்துவிடும்.

கோர்ட்டின் ஓரம் நின்று பந்தைக் கொடுக்கும் அந்த சிறுவனிடமோ, சிறுமியிடமோ இருந்து இரண்டு பந்துகள் வாங்குவார். இன்னொரு பக்கம் இருக்கும் சிறுவனிடமிருந்து ஒரு பந்தைப் பெறுவார். மூன்று பந்துகளையும் கையில் வைத்துக்கொண்டு, பேட்டில் அதைத் தொடுவார். மூன்றில் ஒன்றைக் கீழே போட்டு பேட்டால் தட்டி பின்னால் நிற்கும் சிறுவனிடம் அனுப்புவார். இரண்டில் ஒன்று இப்போது இடதுபுற ஷார்ட்ஸ் பாக்கெட்டை அடையும், ஒன்று கையில் இருக்கும்.

பேஸ்லைனில் படிந்திருக்கும் மண்ணைத் தன் இடது காலால் தள்ளிவிட்டு, இடது கையில் பிடித்திருக்கும் பேட்டால் தன் ஷூக்களைத் தட்டுவார். முதலில் வலது ஷூவின் பக்கவாட்டில்; அடுத்து இடது ஷூவின் பின்புறத்தை; கடைசியாக மீண்டும் வலது ஷூவின் பக்கவாட்டில். மூன்று முறை தட்டிவிட்டு, தன் சர்வ் பொசிஷனில் நின்று, இடது கையில் பேட்டைப் பிடித்து பந்தை தட்டிக்கொண்டிருப்பார். ஷூ தட்டப்பட்டதால் கிளம்பிய புழுதிக்கு மத்தியில் நெற்றியிலிருந்து விழும் அந்த வியர்வைத் துளிகள், அந்த கேமரா ஷாட்டை ஏதோ ஹீரோ இன்ட்ரோ போலக் காட்டிக்கொண்டிருக்கும்.

Rafael Nadal

இப்போது, வலது கையோ மிகநீண்ட ‘routine’-ஐ தொடங்கும். முதலில் வலது தோள்பட்டை, பின்னர் இடது தோள்பட்டை என டீ ஷர்டைத் தூக்கிவிட்டு, மூக்கைத் தொடும். அடுத்ததாக வலது காதோரம் இருக்கும் முடியையும், இடது காதோரம் இருக்கும் முடியையும் ஒதுக்கிவிட்டுவிட்டு, மீண்டும் ஒருமுறை மூக்கைத் துடைக்கும். இவையெல்லாம் சுமார் 10 முறை அந்த பேட் பந்தைத் தட்டுவதற்குள் நடந்து முடிந்திருக்கும். இந்த வழக்கத்தை முடித்த வலது கை, இப்போது பந்தைப் பிடித்து கீழே தட்டத் தொடங்கும்.

தட்டுவதற்கு இடையே ஒருமுறை அன்னார்ந்து பார்த்துவிட்டு, நான்கு முறையோ அல்லது ஐந்து முறையோ பந்தைத் தட்டிவிட்டு, அந்தப் பந்தை சர்வ் செய்வார். இத்தனையும் நடக்கும் நேரத்தில், நடுவரின் டைமர் பூஜ்யத்தை அடைந்துகொண்டிருக்கும். எதிராளியோ காத்திருப்பால் ஏற்படும் வெறுப்பை அடைந்துகொண்டிருப்பார். சொல்லப்போனால், ரசிகர்களும் கூட. ஆனால், அந்த சர்வீஸ் போடும்போது அவர் எழுப்பும் அந்தச் சத்தம்தான் சீராகத் துடிக்கும் உங்கள் இதயத்திற்குக் கொடுக்குப்படும் அபாய மணி.

அந்தக் காத்திருப்பு எல்லோரையும் சோதிக்கலாம். வெறுப்பாக்கலாம். ஆனால், யோசித்துப் பாருங்கள்… தொடர்ந்து எத்தனை நொடி உங்கள் இதயத்தால் சீரில்லாமல் அதிவேகமாகத் துடித்துக்கொண்டே இருக்க முடியும்?

Rafael Nadal

நடாலின் ஆட்டங்கள் எளிதாக இருந்ததில்லை. அவர் அவ்வளவு எளிதில் யாரையும் அட்டாக் செய்ததில்லை. தன் ஆட்டத்தை மாற்றியதில்லை. தரநிலையில் 100-வது இடத்திலிருக்கும் வீரரே சர்வ் செய்தாலும் கூட, ஷோயப் அக்தரின் பந்தை எதிர்கொள்ள நிற்கும் விக்கெட் கீப்பர் போலத்தான் அதை எதிர்கொள்வார். பேஸ்லைனுக்கும் நடாலுக்குமான தூரம், விக்கெட்டுகளுக்கும் மொயீன் கானுக்குமான தூரத்தை ஒத்திருக்கும்.

அவர் எளிதான புள்ளிகள் எடுத்ததில்லை. அவருக்குப் புள்ளிகள் எளிதாகக் கிடைத்ததில்லை. கோர்ட்டின் ஒவ்வொரு மூலைக்கும் அந்தக் கால்கள் ஓடிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு ஷாட்டுக்குப் பின்பும் அவர் சத்தத்தின் டெசிபல் அதிகரித்துக்கொண்டே இருக்கும். செம்மணல் பாலைவனம் போல் இருக்கும் கோர்ட்டின் நடுவே, வற்றாத ஜீவநதியாய் அவர் வியர்வை ஊற்றிக்கொண்டே இருக்கும். எப்போதுவேண்டுமானால் காயப்படுவேன் என்று சொல்லும் கால்களைப் பார்க்கும்போதெல்லாம் பயமாக இருக்கும். அவர் நடையில், மூவ்மென்ட்டில் சிறு மாற்றம் தெரிந்தாலே, அந்தப் பயம் உச்சத்தைத் தொட்டுவிடும்.

ஒவ்வொரு கேமிலும், ஒவ்வொரு புள்ளியிலும் என்ன ஆகப்போகிறதோ என்று இந்த பதைபதைப்பு இருந்திருந்தது. இருந்துகொண்டேதான் இருக்கப்போகிறது. ஆனால், ஐந்து மணி நேரம் தொடர்ந்து அதிவேகமாகத் துடிக்கும் ஆற்றல் நம் இதயத்துக்கு இருப்பதில்லை. இரும்பு இதயம் கொண்டவர்களாக இருந்தாலும், வழிந்து ஓடும் அந்த வியர்வை கொட்டி, அந்தப் புழுதி படிந்து துறுப்பிடித்துப்போகும். பலவீனமாகிவிடும். எப்பேர்ப்பட்ட இதயத்துக்கும் அதைத் தாங்கும் ஆற்றல் இருக்கப்போவதில்லை.

Rafael Nadal

4 அல்லது 5 மணி நேரம், உணர்வின் உச்சத்தை அடையப்போகும் உங்களுக்கு, உங்கள் இதயத்துக்கு, ஆசுவாசம் அடைந்துகொள்ள சீரான இடைவெளியில் நடால் கொடுக்கும் டைம் அவுட் தான் அந்த routine. ஒரு பாயின்ட் 30 ரேலி வரை செல்லும், ஒரு கேம் 18 நிமிடங்கள் வரை செல்லும். அவை முடிந்து ‘அப்பாடா’ என்று நீங்கள் ஆசுவாசப்பட்டு நேரே அமரும்போது, எல்லாமே மீண்டும் ஒரு முறை தொடரும். அது உங்கள் இதயத்திற்கு ஆபத்தானது. அதற்கு அந்த இடைவெளி தேவைதான். கிடைக்கும் அந்த இடைவெளியில் அவர் செய்வதையெல்லாம் மீண்டும் ஒருமுறை கவனித்துப் பாருங்கள். அதுவும் உங்களை ஆசுவாசப்படுத்தலாம்.

தன்னுடைய இந்த வழக்கத்தைப் பற்றி தன் நினைவுக் குறிப்பில் இப்படிக் குறிப்பிட்டிருப்பார் நடால்: Goal of the rituals is to silence the noises in my head. The aim is to bottle up all human feelings by turning himself into a tennis machine.

உங்கள் பதைபதைப்பைப் போக்கவும், இதயத்தை சீராக்கவும் நடாலின் சடங்குகள் துணை புரியலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.