Tirupati: ஏழுமலையான் பக்தர்களுக்கு திடீர் உத்தரவு – தேவஸ்தானம் இப்படியொரு அறிவிப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் திருமலை கோவிலில் பூரண பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ளது, திருப்பதி
ஏழுமலையான் கோவில்
. இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் திருமலை கோவிலில் பூரண பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. மலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாட்டில்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் அல்லது எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருமலைக்கு வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் இனி திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் முழுமையாக சோதனை செய்யப்படுவார்கள் என்றும், பின்னர் அவர்கள் திருமலைக்கு நடந்தோ அல்லது வாகனத்திலோ செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் திருமலையில் உள்ள வியாபாரிகள் இனி பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக மக்கும் அல்லது காகித அட்டைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிளாஸ்டிக் அல்லாத கவர்கள் வழங்குவதற்காக பக்தர்களிடம் வியாபாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் இருக்க, கடைகளின் முன் கட்டண அறிவிப்பு பலகைகளை நிறுவ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் ஈரமான மற்றும் உலர் கழிவுகளை தனித்தனி குப்பைத் தொட்டிகளில் போட்டு எளிதில் குப்பைகளை சேகரிக்க வேண்டும். கடைக்காரர்கள் தாங்கள் விற்க உரிமம் பெற்ற பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் விஜிலென்ஸ், எஸ்டேட் மற்றும் சுகாதார அதிகாரிகள், கடைகள் மற்றும் ஹோட்டல்களில் சோதனை நடத்தும் பட்சத்தில் பிளாஸ்டிக் தடை விதியை மீறி அவற்றை பயன்படுத்தினால், அவற்றை பறிமுதல் செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.