டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்த நிலையில், சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் கவனித்த இலாக்காக்கள் கூடுதலாக துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா அடுத்ததாக கைது செய்யப்படலாம் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலி வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்படுவார் என நான் கணித்திருந்தது நடந்துவிட்டது. இப்போது எனக்கு சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அடுத்தாக மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்காக போலியான வழக்குகளையும் அவருக்கு எதிராக தயார் செய்யும்படி மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.” என்றார்.
பிரதமர் மோடியிடம் ஒரே ஒரு கோரிக்கை வைப்பதாக தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மியின் அனைத்து எம்எல்ஏக்களையும் ஒரே நேரத்தில் கைது செய்து விடுங்கள். எங்களை சிறையில் தள்ளி விடுங்கள். அனைத்து விசாரணை அமைப்புகளையும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தச் சொல்லுங்கள். கைது நடவடிக்கைகளால் மக்கள் பணி தடைபடுகிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.