மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு திருவண்ணாமலையில் சிலை வைக்க எதிர்ப்பு தெரிவித்து, அம்மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அவரின் அந்த மனுவில்,
“திருவண்ணாமலை, வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவரால் 1992-ம் ஆண்டு 92.5 அடி நிலம் விற்கப்பட்டது. அந்த நிலத்தின் அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் கருணாநிதி சிலையை நிறுவுவதற்காக தூண்கள் அமைக்கப்பட்டு, அவசர அவசரமாக பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த சிலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும், அந்த கட்டுமானங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் பருவமழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும். எனவே இந்த வழக்கு முடியும் வரை தற்போதுள்ள நிலையே தொடர உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், “சிலை வைப்பதாக கூறப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்து, வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கின் விசாரணையை ஜூன் 6ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், நாளை நடத்த திட்டமிட்டிருந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றி வைக்க உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
நாளை கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சிலை திறக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த திமுக உடன்பிறப்புகளுக்கு, நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.