ஈரோடு மாவட்டம் பவானியில் டைல்ஸ் கடையில் வேலை பார்த்த பெண் ஊழியரை கர்ப்பிணியாக்கி கருக்கலைப்பு செய்த உரிமையாளரின் அத்துமீறலை வீடியோ மூலம் அம்பலப்படுத்திய சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு பவானி கர்ணாபுரம் 5வது தெருவை சேர்ந்தவர் மலர். குழந்தை இல்லாததால் கணவருடன் கருத்து வேறுபாடு பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வாழ்ந்த மலர் பவானியில் நவ நீதன் என்பவருக்கு சொந்தமான சிமெண்ட் மற்றும் டைல்ஸ் கடையில் 12 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலி மற்றும் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்த மலருக்கு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற போதிய பணம் இல்லாமல் சிரமப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கோவை வந்த மலர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கடையின் உரிமையாளர் நவநீதன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது மருத்துவசெலவு குறித்து தெரிவித்து பணம் கேட்டபோது கடை உரிமையாளர் நவ நீதன் கொடுக்க மறுத்ததால் தான் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறி தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆர்.எஸ்.புரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தான் வேலை பார்க்கும் கடையில் சென்று நேரடியாக தனது கடையின் உரிமையாளர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்தும், அதனால் தான் 6 முறை கர்ப்பியானதாகவும் தன்னை சமாதனப்படுத்தியதால் 6 முறை கருக்கலைப்பு செய்ததால் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்த அந்த பெண், 12 வருடமாக தன்னிடம் அத்துமீறியது அவரது மனைவிக்கும் தெரியும் என்று கடையில் வைத்து அவரிடம் சண்டையிட்டு அதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்தார்.
வறுமை காரணமாக வேலைக்கு வந்த தன்னை ஆசைவார்த்தைக் கூறி ஏமாற்றி சீரழித்ததோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்வதாக மிரட்டுவதாக அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் பரிதாபமாக பலியானார். உயிரிழப்பதற்கு முன்பாக அந்தப்பெண் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று நியாயம் கேட்டுச்சென்ற தன் மீது மண்ணெண்னை ஊற்றி, கடை உரிமையாளர் நவநீதனும் அவரது மனைவியும் தீவைத்து கொழுத்தி விட்டதால் தனக்கு தீக்காயம் ஏற்பட்டதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தற்கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்த ஆர்.எஸ்.புரம் போலீசார் கணவன் மனைவி இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.