ஒக்லஹோமா:அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தோரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் உள்ள துல்சா நகரில் நடாலி மருத்துவ மையம் உள்ளது. இங்கு புற நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை நடக்கும் மருத்துவமனை தனியே இயங்கி வருகிறது.இந்த கட்டடத்திற்குள் இரண்டு துப்பாக்கிகளுடன் புகுந்த மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்தோரை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர்.
மர்ம நபரின் துப்பாக்கி குண்டுக்கு நான்கு பேர் பலியாகினர். தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் அந்த நபர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த வாரம், டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளியில் புகுந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில், 19 குழந்தைகள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே ‘துப்பாக்கி உரிமத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்’ என, ஆளும் ஜனநாயக கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Advertisement