அரிசியில் தாஜ்மஹாலை செதுக்கியவர்கள் – 'லெஜண்ட்' இயக்குநர்களின் சுவாரஸ்ய பின்னணி!

பணம் இருக்கிறதென்பதற்காக போகிற போக்கில் ஏனோதானோவென எடுக்கப்பட்ட ஒரு படமாக மட்டும் ‘லெஜண்ட்’ நிச்சயம் இருக்காது. அதற்கான சாட்சிதான் அந்த ட்ரெய்லரும் கூட!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் ‘லெஜண்ட்’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வைரலாக ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களின் ட்ரெய்லர் டீசர்களுக்கு கிடைக்கும் வரவேற்பிற்கு இணையாக ‘லெஜண்ட்’ படத்தின் ட்ரெய்லருக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியாகி ஒரு சில நாட்களிலேயே யூடியூப்பில் 18 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.

இந்த ட்ரெய்லர் வெளியாகும் முன் பெரும்பாலானோர் ஒரு முன் முடிவோடுதான் இருந்தனர். செல்வந்தரான லெஜண்ட் சரவணன் தன் ஆசைக்காக பணத்தை கொட்டி ஒரு படம் எடுக்கிறார். இதில் சுவாரஸ்யத்தை தூண்டி ரசிக்க வைக்கும் அம்சங்கள் அவ்வளவாக இருக்காது என்றே எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகியிருக்கும் ட்ரெய்லர் இந்த எண்ணங்களை சுக்குநூறாக உடைத்திருக்கிறது. படத்தின் பிரம்மாண்டத்தையும் மேக்கிங்கையும் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுவரை இதை லெஜண்ட் சரவணன் படமாக மட்டுமே அறிந்து கொண்டிருந்தவர்கள், இப்போது இந்த படத்தின் இயக்குநர் யார் என தேடிக்கொண்டிருக்கின்றனர்.

image

இவர்களை இயக்குநர் என்பதை விட இயக்குநர்கள் என பன்மையில் குறிப்பிடுவதே சரியாக இருக்கும்.  ஏனெனில், இந்த படத்தை ஜே.டி – ஜெரி எனும் இரண்டு இயக்குநர்கள் இணைந்தே உருவாக்கியிருக்கிறார்கள்.

ஜேடி-ஜெரி இந்த பெயர் வேண்டுமானால் நமக்கு கொஞ்சம் புதிதாக தெரியலாம். ஆனால், இவர்களின் படைப்புகளை நாம் கண்டிராமல் இருப்பதற்கு வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப குறைவு.  இளையராஜாவின் இசையைபோல இவர்களின் படைப்புகளுமே நம்முடைய அன்றாடத்தில் கலந்தே இருக்கிறது. தொலைக்காட்சி நேரங்களில், பேப்பரை புரட்டுகையில், மொபைல் ஃபோனில் ஸ்க்ரோல் செய்கையில் என ஏதோ ஒரு இடத்தில் இவர்கள் உருவாக்கிய விளம்பரப் படங்களை கடந்த 20 வருடங்களாக பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். உங்களின் கவனத்தை ஈர்த்த உங்களை முணுமுணுக்க வைத்த ஒரு 5 விளம்பரப் படங்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்திருக்கும் 5 விளம்பரப்படங்களில் குறைந்தபட்சமாக ஒரு மூன்று விளம்பரங்களாவது ஜேடி – ஜெரி இயக்கியதாகத்தான் இருக்கும்.

image

‘ஆடியிலே அடிக்குதும்மா அதிர்ஷ்டக் காத்து…..சல்லிசு காசுல தள்ளுபடி விலையிலே’ என ஜவுளிக்கடை விளம்பரத்தில் பரவை முனியம்மா ஆச்சி போட்ட குத்தாட்டமும்

‘கேளுங்க…கேளுங்க…கேட்டுக்கிட்டே இருங்க’ என இமான் குரலில் அதிர அதிர ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு வானொலி நிலைய விளம்பரமும்

வேட்டி கட்டினாலே ‘சல்யூட்….சல்யூட்..’ என மனதிற்குள் தானாகவே கம்பீரத்தை வரவழைக்கும் அந்த விளம்பரமும் என கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் ரசித்து ரசித்து பார்த்த நம் மனதில் பதிந்து போயிருக்கும் பல விளம்பரப்படங்களை இயக்கியது ஜேடி – ஜெரிதான்.

‘லெஜண்ட்’ படத்தின் ட்ரெய்லரில் நாம் பார்த்த பிரம்மாண்டத்தை உருவாக்கியது இவர்கள்தான். அண்ணாச்சி கோடி கோடியாக முதலீடு செய்ய தயாராக இருந்ததால் மட்டுமே இந்த பிரம்மாண்டம் சாத்தியப்பட்டுவிடவில்லை. ஜேடி-ஜெரியின் அனுபவம்தான் இதை சாத்தியப்படுத்தியது. விளம்பரத்துறையில் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், மம்மூட்டி, புனித ராஜ்குமார் போன்றோரை Brand Ambassador ஆக வைத்து பல மொழிகளில் விளம்பரங்களை இயக்கியிருக்கிறார்கள்.  அதேவேளையில், ரொம்பவே சின்ன பட்ஜெட்டில் உள்ளூரில் கிடைத்த ஆட்களை வைத்தும் விளம்பரங்களை இயக்கியிருக்கிறார்கள். இரண்டு விதமான விளம்பரங்களுமே மக்களை ரசிக்க வைத்திருக்கிறது. இன்றைக்கு நாம் திரையில் பார்த்து கொண்டாடும் பிரபலமான பல நடிகைகளை இந்த துறைக்கு விளம்பரப்படங்கள் மூலம் அறிமுகப்படுத்தியதும் இவர்கள்தான்.

image

500-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கி இந்த துறையில் ஒரு உச்ச இடத்தில் இருந்தாலும் திரைப்படங்களை இயக்கி பெரிய திரையிலும் சாதிக்க வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம். அதற்கான முயற்சிகளை பல கட்டங்களிலும் செய்திருக்கிறார்கள். அஜித் மற்றும் விக்ரம் நடித்த ‘உல்லாசம்’ படமும் திகில் படமான விசிலும் இவர்கள் இயக்கியதே. இந்த படங்கள் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெறாததாலும் விளம்பரத்துறையில் தங்களுக்கு இருந்த நல்ல மார்க்கெட் காரணமாகவும் தொடர்ந்து விளம்பரப்படங்களிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.

ஜேடி-ஜெரி இவர்களை வெறுமென கமர்ஷியல் குதிரைகள் என்ற வட்டத்தில் மட்டுமே அடைத்துவிட முடியாது. ஜேடி இலக்கிய வாசிப்பில் அதீத ஆர்வம் மிக்கவர். கல்லூரியில் ஜேடியுடன் நட்பானவுடன் ஜெரியின் கவனமும் இலக்கியம் பக்கமாக திரும்புகிறது. இருவரும் ஆழ்ந்த வாசிப்பில் இன்னும் அதிக நட்பாகினர். விளம்பரப்பட இயக்குநர்களாக ஒரு அந்தஸ்த்திற்கு வந்த பிறகு சாரல் விருது என்ற பெயரில் ஆண்டுதோறும் தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதையும் பண முடிப்பையும் வழங்கி கௌரவிக்கவும் செய்தனர்.

மாபெரும் திரை ஆளுமையான பாலுமகேந்திராவிடம்  உதவியாளர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர். இயக்குநர் பாலாவும் ஜேடி ஜெரியும் பாலு மகேந்திராவின் திரை பள்ளியில் ஒரே செட்.  இந்த பழக்கத்தில்தான் பின்நாளில் ‘பரதேசி’ படத்தில்  கங்காணியாக ஜெரி நடித்திருந்தார்.

தொடக்கத்திலிருந்தே பெரும் ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றி செறிவுமிக்க அனுபவங்களை சம்பாதித்துக் கொள்ளும் வாய்ப்பு ஜேடி – ஜெரிக்கு கிடைத்திருந்தது. இவர்கள் இயக்கிய முதல் படமான உல்லாசத்தை தயாரித்தது அமிதாப் பச்சன். அந்த படத்திற்கு வசனம் எழுதியது எழுத்தாளர் பாலகுமாரன். ‘விசில்’ படத்திற்கு வசனம் எழுதியது சுஜாதா. சுஜாதா மூலம் இயக்குநர் ஷங்கரின் அறிமுகம் கிடைக்க ‘ரோபோ’ மற்றும் ‘சிவாஜி’ யில் இயக்குநர் ஷங்கருக்கு உதவியாளராகவும் வேலை பார்த்திருக்கின்றனர்.

‘எல்லாம் சரி சக்ஸஸ்ஃபுல்லா இருக்குறீங்க..எனக்கு பெருமைதான். ஆனா, படம் பண்றதை விடக்கூடாது. அதுக்காத்தானே நாம வந்தோம்’ என குருவான பாலுமகேந்திரா ஜேடி – ஜெரியிடம் அடிக்கடி கூறுவார். அதை மனதில் வைத்துக் கொண்டுதான் இருவருமே ஓடிக்கொண்டிருந்தனர். சில படங்கள் தொடங்கும் நிலையிலிருந்து அப்படியே கைவிடப்பட்டிருக்கின்றன. இந்த சமயத்தில்தான் அண்ணாச்சி விளம்பரங்களுக்குள் வருகிறார். அந்த விளம்பரங்கள் பேசுபொருளாகிறது. அண்ணாச்சி திரைப்படங்களிலும் நடிக்க விரும்புகிறார். ஜேடி-ஜெரி மீண்டும் பெரிய திரைக்கு தயாராகினர்.

ஜேடி-ஜெரியை பற்றியும் அவர்களின் விளம்பரங்களை பற்றியும் குறிப்பிடும்போது ‘அரிசியில் தாஜ்மஹாலை செதுக்குபவர்கள்’ என வைரமுத்து புகழ்ந்திருப்பார். அரிசியிலேயே தாஜ்மஹாலை செதுக்கியவர்கள், தாஜ்மஹாலை செதுக்குவதற்கென்றே ஒரு பெரிய இடம் கொடுத்தால் என்ன செய்வார்கள்? அதைத்தான் அந்த ட்ரெய்லரில் பார்த்தோம்.

பெரு முதலாளியான அண்ணாச்சி அதிகமாக முதலீடு செய்ததால் மட்டுமே இந்த ‘லெஜண்ட்’ இவ்வளவு பெரிய ஸ்கேலில் உருவாகவில்லை. ஜேடி-ஜெரியின் அனுபவமும் அவர்கள் மீது பலரும் வைத்திருக்கும் மரியாதையும்தான் இந்த படத்தை பெரிதாக்கியது. மின்னலே சமயத்தில் ஹாரிஸ் ஜெயராஜூடன் இணைந்து இருவரும் பணியாற்ற முற்பட்டிருக்கின்றனர். அப்போது நடக்காமல்போன அந்த காம்போ இப்போது இணைந்திருக்கிறது.

‘விசில்’ படத்தின் விவேக் காமெடிகள் இன்றைக்கும் குலுங்க குலுங்க சிரிக்க வைப்பவை. அந்த பழக்கத்தில்தான் விவேக் இந்த படத்திற்குள்ளும் வருகிறார். சமீபத்தில் மிக பிரம்மாண்டமாக நடந்த ‘லெஜண்ட்’ இசைவெளியீட்டு விழாவில் பிரபலமான நடிகைகள் நிறைய பேர் பங்கேற்றிருந்தனர். ஹன்சிகா, தமன்னா உட்பட அந்த நடிகைகளில் பலருமே பள்ளியில் படித்துக் கொண்டுருக்கும்போதே ஜேடி-ஜெரியின் விளம்பரங்களில் நடித்து மாடலிங் துறைக்குள் நுழைந்தவர்கள். கோடிகளை கொடுத்ததற்காக மட்டுமில்லை. இந்த மரியாதைக்காகவும்தான் அவர்கள் இசை வெளியீட்டு விழா மேடையை அலங்கரித்திருந்தனர்.

திரைக்கு முன்னால் நிற்கும் அண்ணாச்சியை ட்ரோல் செய்யும் பலருமே திரைக்கு பின்னால் நிற்கும் ஜேடி-ஜெரியின் கனவுகளை உணராதவர்கள். ஆசான் பாலுமகேந்திராவின் வார்த்தைகளை நிஜமாக்கும் லட்சியத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ‘லெஜண்ட்’ படத்தின் வெற்றி தோல்வியை இப்போது கணிக்க முடியாது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாக கூறலாம். இது பணம் இருக்கிறதென்பதற்காக போகிற போக்கில் ஏனோதானோவென எடுக்கப்பட்ட ஒரு படமாக மட்டும் நிச்சயம் இருக்காது. அதற்கான சாட்சிதான் அந்த ட்ரெய்லரும் கூட!

ஜேடி-ஜெரியின் கனவு ஜெயிக்குமா?

-உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாம்: பாடகர் கே.கே மரணம்: ரசிகர்கள் முன்வைக்கும் பகீர் புகார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.