அரியலூரில் போக்குவரத்து கழக ஊழியர் வீட்டில் 30 பவுன் நகை 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போன நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர் மின் நகர் 9வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ராமச்சந்திரன், இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் கிளையில் ஸ்டோர் கீப்பர் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் தனது சொந்த ஊரான கீழநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு ஊர் திரும்பிய அவர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ இருந்த 30 பவுன் நகைகள் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பறியும் நாய் உதவியுடன் குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அரியலூர் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
