அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர்

ருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில், கரூர் மாவட்டம், வெஞ்சமாங்கூடலூரில் அமைந்துள்ளது.

தேவர்களின் அரசனாகிய இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்வதற்காக இங்கு வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான் என்பது ஐதீகம். சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலும் ஒன்று. சுந்தரர் பாடலுக்கு மகிழ்ந்து சிவபெருமான் ஒரு கிழவராக வந்து தன் இரு குமாரர்களை ஒரு மூதாட்டியிடம் (இவ்வுருவில் வந்தது பார்வதி தேவியே) ஈடு காட்டிப் பொன் பெற்று சுந்தரருக்கு பரிசு வழங்கினார் என்று இத்தலத்து வரலாறு கூறுகிறது.

ஒரு சமயம் வேடசந்தூர் பக்கத்திலுள்ள அணைக்கட்டு உடைந்து, குடகனாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஊரும் பல நூற்றாண்டுகள் பழமையான இக்கோவிலும் அழிந்தன. இக்கோவில் கருங்கற்கள் வெள்ளத்தில் 2 கி.மீ. தூரம் அடித்துச் செல்லப்பட்டன என்பதிலிருந்தே வெள்ளப் பெருக்கின் நிலைமையை உணரலாம். அதன் பின் 1982-ம் ஆண்டு ஈரோடு அருள் நெறித் திருக்கூட்டத்தார் இக்கோவில் திருப்பணியைத் தொடங்கி, பெருமுயற்சி செய்து, பல லட்சங்கள் திரட்டி, திருக்கோவிலைப் புதியதாக எடுப்பித்து, 26-2-1986 அன்று (குரோதன ஆண்டு மாசி 14 – புதன்கிழமை) மகா கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்துள்ளனர்.

குடகனாறு மற்றும் சிற்றாறு (தற்போது இது குழகனாறு என்று அழைக்கப்பட்டாலும் சுந்தரர் தனது பதிகத்தில் சிற்றாறு என்று தான் குறிப்பிடுகிறார்) இரண்டும் கூடும் இடத்தில் இருப்பதாலும், வெஞ்சன் என்ற வேடுவ அரசன் இப்பகுதியை ஆண்டு வந்ததாலும் இத்தலம் வெஞ்சமாக்கூடல் என்று பெயர் பெற்றது. சிற்றாற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கொங்கு நாட்டு திருத்தலங்ளுக்கே உரித்தான கருங்கல் விளக்குத் தூண் (தீபஸதம்பம்) இராஜகோபுரத்திற்கு எதிரே காணப்படுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஐந்து நிலை கோபுரமும் பெரிய பிரகாரமும் உடைய இக்கோவிலில் உள்ள இறைவன் விகிர்த நாதேஸ்வரர் என்றும், இறைவி விகிர்த நாதேஸ்வரி என்றும் அறியப்படுகிறார்கள். இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் சுமார் 17 படிகள் கீழிறங்கித் தான் பிரகாரத்தை அடைய முடியும். ஆற்றங்கரையாகவும், தாழ்நிலப் பகுதியாகவும் இருப்பதால், வெள்ளம் அடித்துச் சென்றிருக்கவேண்டும் என்பது புரிகிறது. படிக்கட்டுகள் இறங்கியதும் நேர் முன்னால் உள்ள நீண்ட முகப்பு மண்டபத்தில் கொடி மரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். வெளிப் பிரகாரம் சுவாமி சந்நிதி, இறைவி சந்நிதி இரண்டையும் உள்ளடக்கி உள்ளது. உட்பிரகாரத்தின் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர் பெருமக்கள். தொடர்ந்து அறுபத்துமூவர். இந்த மூர்த்தங்களின் கீழ் அவரவர் நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.

இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடன் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது கால் வைத்தமர்ந்து கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அருணகிரிநாதரின் திருப்புகழில் ஒரு பாடல் இத்தலத்திற்குரியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.