லண்டன்:பிரிட்டன் ராணியாக இரண்டாம் எலிசபெத் பதவியேற்றதன், 70ம் ஆண்டையொட்டி நடைபெறும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய, 40 பேருக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது.
இதில், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு உயர் கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இரண்டாம் எலிசபெத், 96, பதவியேற்று, 70 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, பிரிட்டன் அரண்மனையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய 40 பேருக்கு கவுரவ பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு, ‘சேம்பியன் ஆப் ஹானர்’ என்ற உயர் கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த ருஷ்டி, 12க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிஉள்ளார். புக்கர் பரிசு உட்பட பல பரிசுகளை வென்று உள்ளார்.
பிரிட்டனில் கலை, இலக்கியம், அறிவியல், அரசுப் பணிகளில் நீண்ட காலம் சேவை புரிந்தோருக்கு, சேம்பியன் ஆப் ஹானர் பட்டம் வழங்கப்படுகிறது. முன்னாள் பிரதமர்கள் வின்ஸ்டன் சர்ச்சில், ஜான் மேஜர், பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் ஆகியோருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டு உள்ளது.
இதைத் தவிர, பல்வேறு துறைகளில் சிறப்பான சேவை புரிந்துள்ள இந்திய வம்சாவளியினருக்கும், ‘ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர்’ என்ற கவுரவ பட்டம் வழங்கப்பட உள்ளது. சமூக சேவையில் ஈடுபட்டுள்ள ‘கேர் இங்கிலாந்து’ அமைப்பின் தலைவர் அவினாஷ் மிட்லர் கோயல்; உணவுக் கலை நிபுணர் கிஷோர்காந்த் படேசா; ஆசிரியர் ரோஹித் நாயக் உள்ளிட்டோருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே பிரிட்டன் ராணுவத்தின் நான்கு நாள் மரியாதை அணிவகுப்பு நேற்று துவங்கியது. மிகவும் வண்ணமயமான இந்த அணிவகுப்பில், குதிரைகளில் வீரர்கள் வந்து, ராணிக்கு மரியாதை செலுத்தினர்.
Advertisement