திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலிருக்கும் மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் இளைஞர் பிரபாகரன் ராணுவத்தில் பணிபுரிந்துவந்தார். இவருக்குத் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், தனக்குத் திருமணமானதை மறைத்து, அதே பகுதியைச் சேர்ந்த சரிகா என்ற இளம்பெண்ணைக் காதல் வலையில் வீழ்த்தியிருக்கிறார் பிரபாகரன். இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பழகி வந்திருக்கின்றனர். 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி, சரிகாவை வீட்டிலிருந்து வெளியூர் அழைத்துசென்ற பிரபாகரன் ஒரு கோயிலில்வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து, சரிகாவின் தந்தை பழனி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த சமயத்தில் சரிகா 18 வயது நிரம்பாதவர் என்பதால், போலீஸார் ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, பிரபாகரனைக் கைதுசெய்து சிறையிலடைத்தனர். சரிகா அவரின் தந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். பிணையில் வெளிவந்த பிரபாகரன் மீண்டும் தன் காதலி வீட்டுக்குச் சென்று மிரட்டி தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அப்போதுதான் பிரபாகரனுக்கு ஏற்கெனவே திருமணம் ஆனதும், முதல் மனைவி வீட்டிலிருப்பதும் சரிகாவுக்குத் தெரியவந்தது. மன உளைச்சலுக்கு ஆளான சரிகா மீண்டும் தாய் வீட்டுக்கே சென்றுவிட்டார்.
இந்த நிலையில், கடந்த 29-ம் தேதி பிரபாகரன் தன்னுடைய முதல் மனைவி பூர்ணிமாவை காதலி சரிகா வீட்டு முன்பு அழைத்துச் சென்று, தனது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இதனால், வெறுப்படைந்த சரிகா நேற்று மதியம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்துவந்த ஜோலார்பேட்டை போலீஸார் சரிகாவின் உடலை மீட்டபோது, அவர் தற்கொலை செய்துகொண்ட அறையிலிருந்து 12 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றைக் கைப்பற்றினர்.
இந்த கடிதத்தை தலையணையில் வைத்திருப்பதாக ‘லெட்டர் இன் பில்லோ’ என ஆங்கிலத்தில் பேனாவால் தனது கையில் எழுதியிருந்தார் சரிகா. அந்த கடிதத்தைக் கைப்பற்றி பார்த்தபோது, ‘‘என்னை மன்னித்து விடுங்கள் அப்பா. அம்மாவை செல்லமாகப் பார்த்துகொள்ளுங்கள். அம்மாவை அடிக்காதே. எனக்கு இந்த உலகத்தில் வாழப் பிடிக்கவில்லை’’ என எழுதியிருந்தார் சரிகா. இதையடுத்து, சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.