ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு எதிர்வரும் 16ம் திகதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவிற்கமைய, ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிற்கு செல்லவிருந்த ஏ330 ரக விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் உள்ள செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் லிமிடெட் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைய, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்க, பிரதிவாதியான ரஷ்ய விமான சேவைக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ரஷ்ய விமான நிறுவனத்துடன் தங்களுக்கு ஒரு தீர்வு வழக்கு இருப்பதாக முறைப்பாட்டாளரான விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, பிரதிவாதி விமான சேவைக்கு சொந்தமான விமானம் இலங்கையை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முறைப்பாட்டு நிறுவனம் முறைப்பாட்டினை தாக்கல் செய்துள்ளது.
தடுத்து வைக்கப்பட்ட விமானம்
குறித்த முறைப்பாட்டினை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த விமானம் இன்று மதியம் 12.50 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரத்திற்கு புறப்பட இருந்தது. அதற்கமைய, மொஸ்கோவிற்கு செல்ல தயாராக இருந்த 191 பயணிகள், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் பெர்முடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இரட்டைப் பதிவைக் கொண்டிருந்ததாகவும் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏழு தடவைகள் தரையிறங்கிய விமானம்
இந்த Airbus A330 விமானம் இதற்கு முன்னர் ஏழு தடவைகள் இலங்கையில் தரையிறங்கியுள்ளதாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய விமான நிறுவனங்களின் விமானங்களை தடுத்து வைக்க மாட்டோம் என கடந்த மார்ச் மாதம் ரஷ்ய விமான சேவை நிறுவனத்திற்கு இலங்கை அதிகாரிகள் உத்தரவாதம் வழங்கியுள்ளனர். எனினும் தற்போது உத்தரவாதத்தை மீறி விமானம் தடுத்து வைக்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் தகவலிற்கமைய, ரஷ்ய விமான நிறுவனம் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.