இலங்கை மின்சார சபை எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 07 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபை, 08 ஆம் திகதி மொறட்டுவைப் பல்கலைக்கழகம் என்பனவும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.
கோப் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது.
அதேபோன்று, அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் சில கூட்டங்களும் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 07 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சு, 08 ஆம் திகதி இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்படுத் திணைக்களம், 09 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு என்பன கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.
அதற்கு மேலதிகமாக எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், சதொச நிறுவனம், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம், இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் அதிகாரிகளின் பங்குபற்றலில் நடைபெறவுள்ளது. கோபா குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண தலைமையில் கூடவுள்ளது.