பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற அகந்தையை விட்டொழித்தால் தேசத்தின் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று சிவசேனா கட்சி கூறியுள்ளது.
மாகாராஷ்டிராவின் புனே நகரில் நேற்று பாபா சாகேப் அம்பேத்கர் பவனை சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “வெற்றிக்கு, புத்தரின் ஒரே ஒரு அறிவுரையை மட்டும் பின்பற்றினால் போதும். அது, நான் என்ற அகந்தையை கைவிடுவது. வாழ்க்கையில் வெற்றி பெற்ற அனைவருமே நான் என்ற அகந்தையை விட்டொழித்தவர்கள் தான். அதை விட்டுவிட்டால் போதும் சமூகத்தில், தேசத்தில் உள்ள பிரச்சினைகள் சரியாகிவிடும். எனவே, நான் என்ற அகந்தையை விட்டொழிக்குமாறு யாராவது மோடியிடம் சொல்லுங்கள்” என்றார்.
முனிசிபல் தேர்தல் பற்றி அவர் பேசும்போது, “சிலர் ஹனுமன் சாலிஸா கூறுவதை முக்கியப் பணியாக செய்கின்றனர். ஹனுமன் சாலிஸா கூறுவது முக்கியம்தான் ஆனால் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதே முக்கியம். சிவசேனா மக்கள் நலனுக்காக நிறைய செய்துள்ளது. ஆனால் அதை ஒலிபெருக்கில் சொல்லவில்லை. ஆனால் இந்த முறை நாங்களும் ஒலிப்பெருக்கி மூலம் மக்கள் சேவையை எடுத்துரைப்போம்” என்று கூறினார்.
முன்னதாக சஞ்சய் ரவுத் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நவிஸ் மீது வைத்த விமர்சனம் மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பல்வேறு சலசலப்புகளை ஏற்படுத்தியது.
சஞ்சய் ரவுத், “மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கணவன்-மனைவி (எம்.பி. நவநீத் ராணா மற்றும் எம்எல்ஏ ரவி ராணா) இருவரின் வழிநடத்துதலில் மட்டுமே செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார். கடந்த சில நாட்களாக, சில போலி இந்துத்துவவாதிகள் ‘மாதோஸ்ரீ’, முன்பு ‘ஹனுமான் சாலிசா’ ஓத முற்பட்டு, மும்பையில் உள்ள அமைதிச் சூழலை கெடுக்க முயன்றனர்” என்று கூறியிருந்தார்.