வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்-”பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால், உள்நாட்டு போர் வெடிக்கும்,” என, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், பிரதமர் இம்ரான் கான் பதவியை இழந்தார். இதையடுத்து, பாக்., முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப், புதிய பிரதமராக பொறுப்பேற்றார்.அமெரிக்கா செய்த சதியால், தன் ஆட்சி கவிழ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி வரும் இம்ரான் கான், புதிய அரசை, இறக்குமதி அரசு என விமர்சித்து வருகிறார்.
‘இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல; வெளிநாட்டு சதியால் உருவான அரசு’ என விமர்சித்து வரும் இம்ரான் கான், பார்லி., தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்து வருகிறார். இஸ்லாமாபாதில் பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தொண்டர்களை குவித்து, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை போராட்டம் நடத்த திட்டமிட்டார்.அங்கு தொண்டர்கள் குவிந்த நிலையில், கடைசி நேரத்தில் போராட்டத்தை கைவிட்டார்.
‘தேர்தல் அறிவிக்கப்படவில்லை எனில் போராட்டம் தொடரும்’ என எச்சரித்தார்.இந்நிலையில், பாக்., ஊடகத்திற்கு இம்ரான் கான் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:நாங்கள் ஆட்சிக்கு வந்த புதிதில் பலவீனமாகவே இருந்தோம். எங்கள் கைகள் கட்டப்பட்டு இருந்தன. எல்லா திசையில் இருந்தும் நாங்கள் மிரட்டப்பட்டோம். எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பாக்.,கில் அதிகாரங்கள் எங்கு குவிந்து கிடக்கின்றன என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தேர்தல் அறிவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபடும் எங்கள் கட்சி தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அந்த உத்தரவு வந்ததும், அடுத்த போராட்டம் தொடர்பாக அறிவிக்க உள்ளேன். தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை எனில், நாட்டில் உள்நாட்டு போர் வெடிக்கும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Advertisement