‘ஏசி சரியாக வேலை செய்யாதது உண்மைதான், ஆனால்…’ – கே.கே. இசை நிகழ்ச்சி குறித்து விளக்கம்

எல்லா நெறிமுறைகளையும் பின்பற்றியே, மறைந்த பாடகர் கே.கே.வின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், எனினும் திடீரென அவ்வளவு பார்வையாளர்கள் கூட்டம் எங்கிருந்து வந்தது என தெரியவில்லை என்று, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

கே.கே. என்று சுருக்கமாக அழைக்கப்படும் 53 வயதான கிருஷ்ணகுமார் குன்னத், நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நஸ்ரூல் மஞ்சாவில் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவருக்கு ஆடிட்டோரியத்தில் உடலில் அசௌகரியமான சூழ்நிலை நிலவியதை அடுத்து, அங்கிருந்து வெளியேறியுள்ளார். பின்னர், ஓட்டலுக்கு திரும்பியநிலையில் மயங்கி விழுந்த கே.கே.வை உடனடியாக பாதுகாவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

image

இது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கே.கே. இறப்பதற்கு முன்னர், ஆடிட்டோரியத்தில் ஏசி குறைவாக இருந்ததாகவும், இதனால் வெப்பம் அதிகமாக காணப்படுவதால், ஏசியை ஆன் செய்யுமாறு அடிக்கடி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கண்கள் கூசும் அளவில் ஒளிர்ந்த விளக்குகளை அணைக்க கூறியதாகவும் தகவல்கள் பரவின. மேலும், கே.கே.விற்கு அடிக்கடி வியர்த்துக் கொட்டியதால், அதனை தனது துண்டால் துடைத்துக்கொண்டே இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

image

அத்துடன், அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்களை விட, நுழைவாயில் கதவை உடைத்துக்கொண்டு பாஸ் இல்லாமலே அளவுக்கு அதிகமான மக்கள் உள்ளே நுழைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த அரங்கத்திற்குள் சிலர், தீயணைப்பானை அடித்ததாகவும், அதனால்  கே.கே.விற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, குருதாஸ் கல்லூரியின் மாணவர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ‘இந்தியா டுடே‘விடம் பிரத்யேகமாக பேசிய குருதாஸ் கல்லூரியின் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் சுமன் ஹோர், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில், தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சிக்கான பாஸ்களை விநியோகித்தோம். நாங்கள் அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றியே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம்.

image

இதற்காக கொல்கத்தா காவல்துறையிடமும் அனுமதி பெற்றிருந்தோம். அதுமட்டுமின்றி 30 முதல் 35 பவுன்சர்கள் பாகாப்புக்காக இருந்தனர். அவர்களுடன், காவல்துறையினர் மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் கூட இருந்தது.  எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு 3,500 பாஸ்களை வழங்கியிருந்தோம். நிகழ்ச்சியைக் காண குறைந்தது 5,000 பேர் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. அரங்கத்தின் உள்ளே நுழைய, சுவர்களைத் தாண்டி அவர்கள் குதித்தனர். எங்களது வாலண்டியர்ஸ் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆடிட்டோரியத்தில் இருந்த ஏசிகள் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, குருதாஸ் கல்லூரியின் மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் சுமன் ஹோர் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் நிகழ்ச்சியின் போது, கே.கே. எந்த உடல்நலப் பிரச்சினை குறித்தும் தங்களிடம் புகார் செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

image

அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய திரிணாமூல் சத்ர பரிஷத்தின் மாணவர் பிரிவு, குருதாஸ் கல்லூரியின் மாணவர் சங்கத்தை நிர்வகித்து வருகிறது. இந்த சங்கத்தின் சார்பாக, மே 31-ம் தேதி அன்று கே.கே.வின் நிகழ்ச்சியை, கொல்கத்தாவைச் சேர்ந்த பிளாக் ஐட் ஈவென்ட்ஸ் ஹவுஸ் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதே நிகழ்ச்சி ஏற்பாடு நிறுவனம் தான், மே 30 அன்று விவேகானந்தா கல்லூரியின் சார்பாக கல்லூரி விழாவை, கே.கே. இசைநிகழ்ச்சி நடத்திய அரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.