ஒவ்வொருவராக கைது செய்வதைக் காட்டிலும் ஆம் ஆத்மி தலைவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக கைது செய்துவிடுங்கள் என்று கூறியுள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால்.
கடந்த 2017-ம் ஆண்டு சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத்துறை வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. இந்த நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத்துறையினர் அண்மையில் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி அமைச்சரவையின் மற்றுமொரு முக்கிய நபரான மனீஷ் சிசோடியாவும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து அரவிந்த் கேஜ்ரிவால், “நான் ஏற்கெனவே கூறியிருந்தது போல் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். அவர் மீது போலி வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்படுவார் என நான் கணித்திருந்தது நடந்துவிட்டது. இப்போது எனக்கு சில நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அடுத்தாக மனீஷ் சிசோடியா கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்காக போலியான வழக்குகளையும் அவருக்கு எதிராக தயார் செய்யும்படி மத்திய விசாரணை அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நான் பிரதமரின் ஒரே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். ஆம் ஆத்மி கட்சியின் எல்லா எம் எல்ஏக்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் கைது செய்து விடுங்கள். எங்களை சிறையில் தள்ளுங்கள். அனைத்து விசாரணை அமைப்புகளையும் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தச் சொல்லுங்கள். கைது நடவடிக்கைகளால் மக்கள் பணி தடைபடுகிறது” என்று கூறியுள்ளார்.
மனீஷ் சிசோடியாவுக்கு புகழாரம்: மாநில கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், “மனிஷ் சிசோடியா சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி அமைச்சர். டெல்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு அரசுப் பள்ளியில் தரமான கல்வி பெறலாம் என்ற நம்பிக்கையை அவர் ஏற்படுத்தியுள்ளார். டெல்லி பள்ளிக் குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்டுப் பாருங்கள் மனீஷ் சிசோடியா ஊழல்வாதியா என்று?
இப்போது ஆம் ஆத்மியை குறிவைத்து நடக்கும் விசாரணைகள் இமாச்சலப் பிரதேச தேர்தலை முன்னிட்டு கொடுக்கப்படும் அழுத்தம் என சிலர் கூறுகின்றனர். இன்னும் சில பஞ்சாப் தேர்தல் வெற்றிக்கான பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். காரணம் எதுவாக இருந்தாலும்கூட எங்களுக்கு கைதாவதில் அச்சமில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஆம் ஆத்மி மீது ரெய்டுகள் ஏவப்பட்டன. ஆனால் ஏதும் கண்டுபிடிக்கவில்லை. இதை நாங்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்கிறோம். பிரதமர் மோடி எங்கள் எல்லோரையும் அங்கீகரித்துள்ளார் என்று கருதுகிறோம்” என்று கூறியுள்ளார்.