தெலங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில், திருமணமான இருபதே நாட்களில் கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளையும், மகளுக்கு ஆதரவாகப் பேசிய தாயாரையும், தந்தை கட்டையால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மே மாதம் 8ந் தேதி திருமணமாகி கணவர் வீட்டிற்கு சென்ற சரஸ்வதி, கருத்து வேறுபாடால் கடந்த வாரம் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
தந்தை கிருஷ்ணப்பா எவ்வளவோ சமாதானம் செய்தும் சரஸ்வதி செவி சாய்க்கவில்லை என்றும், சரஸ்வதிக்கு ஆதரவாக தனது மனைவி கமலம்மாவும் பேசி வந்ததால் கிருஷ்ணப்பா கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இரவு மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த கிருஷ்ணப்பா, தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் மகளை கட்டையால் தாக்கி விட்டு, பின் அவர்கள் இறந்து விட்டதாக கருதி அவரும் விஷம் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரஸ்வதியும் அவரது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விஷம் குடித்த கிருஷ்ணப்பா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.