தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ராஜேஸ்வரி, காதல் விவகாரத்தினால் தன் பெற்றோராலேயே ஆணவக்கொலை செய்யப்பட்ட நிகழ்வு, சில தினங்களுக்கு முன்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தத் துயரத்தின் சுவடு மறைவதற்குள், குடும்ப வன்முறையால் அம்மாநிலத்தில் புது மணப்பெண் உட்பட இரண்டு உயிர்கள் பலியாகியிருப்பது, பெரும் சோகத்தையும் பதைபதைப்பையும் உண்டாக்கியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் மஹபூப்நகர் மாவட்டத்திலுள்ள ஜெயினல்லிப்பூர் கிராமத்தில்தான் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. அந்தக் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணய்யா – கலாம்மா தம்பதியின் மகள் சரஸ்வதிக்கு, அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருடன், கடந்த மே மாதம் 8-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. சரஸ்வதிக்கு விருப்பமில்லாமல் திருமணம் நடைபெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், புகுந்த வீட்டுக்குச் சென்ற பத்து நாள்களிலேயே அங்கிருந்து தன் பெற்றோர் வீட்டுக்கு வந்திருக்கிறார் சரஸ்வதி. பின்னர், கணவர் வீட்டுக்குச் செல்ல மறுத்திருக்கிறார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணய்யாவுக்கும் சரஸ்வதிக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
கணவரா, மகளா என்ற பரிதவிப்பில் மகளுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார் கலாம்மா. மகள், கணவர் வீட்டில்தான் வாழ வேண்டும் என்று கிருஷ்ணய்யா உறுதியுடன் இருந்துள்ளார். இதனால், மூவருக்கும் இடையிலான குடும்பச் சண்டை, இரண்டு தினங்களுக்கு முன்பு உச்சத்துக்குச் சென்றுள்ளது. ஆத்திரம் கண்ணை மறைப்பதுபோல, தன் மனைவி மற்றும் மகளைக் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார் கிருஷ்ணய்யா. பின்னர், தானும் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்திருக்கிறார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
சரஸ்வதியும் அவரின் அம்மா கலாம்மாவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுள்ளனர். மேல்சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்குக் கொண்டுசெல்லும் வழியில் இருவரும் உயிரிழந்துவிட்டனர். மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ணய்யா, அபாயகட்டத்தைத் தாண்டி உயிர்பிழைத்திருக்கிறார். இந்தச் சோக நிகழ்வு குறித்து விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், கிருஷ்ணய்யாமீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். கல்யாண சுபநிகழ்வு நடந்த சில வாரங்களிலேயே தாயுடன் சேர்ந்து புது மணப்பெண் உயிரிழந்த சம்பவம், உள்ளூர் மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.