கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டத்திலுள்ள திலுவள்ளி கிராமத்தில், 19 வயதான மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை சிறுமியை எப்போதும் போல வீட்டின் வெளியே கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, அவர் பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ளனர். அதே கிராமத்தில் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சொரபா தாலுகாவைச் சேர்ந்த பரசுராம் மடிவாலர் (38), யஷாந்த் (38) ஆகிய இருவரும் கூடார வியாபாரம் செய்துவந்துள்ளனர்.
சம்பவத்தன்று மாலை பரசுராம் மடிவாலர், யஷாந்த் ஆகிய இருவரும் மாற்றுத் திறனாளி சிறுமியின் வாயில் துணியைத் திணித்து வீட்டிற்குள் தூக்கிச்சென்று அந்த சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த நேரத்தில் பள்ளிக்குச் சென்றிருந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரி வந்தபோது இந்த கொடூர சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து சத்தமிட்டு அக்கம்பக்கத்தினரை அழைக்கக் குற்றவாளிகள் இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இது தொடர்பாக அடூர் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கதேப்பா, “பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டின் வெளியே ஒரு கட்டிலில் தனியாகப் படுத்திருப்பதைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கவனித்துள்ளனர்.
அதன்பின்பே அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். சிறுமியின் சகோதரி உதவி கேட்டு அலறியதால், குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி சிறுமி படுத்த படுக்கையாக இருந்தாலும், எங்களுக்கு சில தகவல்களை கொடுத்தார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பரசுராமைக் கைது செய்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் யஷாந்தை விரைவில் கைதுசெய்வோம்” எனக் கூறினார்.