Tamilnadu Government boycott National education ministers conference: தேசிய அளவிலான கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. இந்த மாநாட்டில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் கல்வித்துறை செயலாளர்கள் உள்ளிட்ட யாரும் கலந்துக் கொள்ளவில்லை.
குஜராத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில், தேசிய அளவில் கல்வி அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு புதன் (ஜூன் 1) மற்றும் வியாழக்கிழமைகளில் (ஜூன் 2) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
குஜராத்தில் நடைபெறும் இந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில், புதிய தேசிய கல்விக் கொள்கை, பள்ளி கட்டமைப்புகள் மேம்பாடு போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார்.
இதையும் படியுங்கள்: சசிகலா வந்தால் பா.ஜ.க வலுப் பெறும்: நயினார் நாகேந்திரன்
இந்தநிலையில், இன்று முதல் நாள் மாநாடு நடைபெற்ற நிலையில், இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் இருந்து யாரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருவரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. மேலும் தமிழக அரசு சார்பில் கல்வித்துறை செயலாளர்கள் யாரும் மாநாட்டில் கலந்துக்கொள்ளவில்லை.