புதுடெல்லி :
நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டையொட்டி சபர்மதி ஆசிரமத்தில் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சிறப்பு யாத்திரை டெல்லியில் நேற்று நிறைவடைந்தது. நாடு விடுதலை அடைந்த 75-வது ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி மத்திய-மாநில அரசுகள் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கிரஸ் கட்சியும் நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டை சிறப்பாக அனுசரித்து வருகிறது. இதில் முக்கியமாக ‘சுதந்திரத்தின் கவுரவ யாத்திரை’ என்ற பெயரில் சிறப்பு யாத்திரையை ஒருங்கிணைத்தது. மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கிய இந்த யாத்திரை ராஜஸ்தான், அரியானா வழியாக நேற்று மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள டெல்லி ராஜ்காட்டில் நிறைவடைந்தது.
அங்கு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் சோனியா மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான தொண்டர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். யாத்திரை சென்ற பல்வேறு இடங்களில் இருந்து தொண்டர்கள் சேகரித்து வந்த மண் மற்றும் தண்ணீரை சோனியா பெற்றுக்கொண்டார். இந்திய விடுதலை போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சந்தித்த இன்னல்கள், வழங்கிய தியாகங்களை இன்றைய இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்பட்டது.
தேசத்தை கட்டியெழுப்ப காங்கிரஸ் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இந்த யாத்திரையில் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. சுமார் 2 மாதங்கள் நடந்த இந்த யாத்திரையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்று பாதயாத்திரையாக நடந்து வந்தனர். இந்த யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில்குமார் சவுத்ரி, நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால், அதை நோக்கி இந்த யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.