ஜம்மு-காஷ்மீரில் வங்கி மேலாளர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவத்தைக் கண்டித்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப நாட்களாக இந்து மதத்தைச் சேர்ந்த அரசு ஊழியா்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வங்கி மேலாளர் ஒருவர் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
குல்காம் மாவட்டம் ஆரே என்ற பகுதியில் எலகாஹி தெஹாதி வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக ராஜஸ்தானை சேர்ந்த விஜய் குமார் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவர் மீது பயங்கரவாதிகள் இன்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.
இதனைத்தொடர்ந்து விஜய் குமாரின் கொலையை கண்டித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஷ்மீரில் பணிபுரியும் இந்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனிடையே இந்துக்களை குறிவைத்து படுகொலை செய்யும் சம்பவத்திற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: ”தோல்வியை நினைத்து நாம் வருத்தப்பட வேண்டியதில்லை”- தொண்டர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM