புதுடெல்லி, : பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை கோடிக்கணக்கான மககள் பயன்படுத்துகின்றனர். இதில், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் பொய்யான தகவல்களும், தனிநபர்களை சாடும் தகவல்களும் சரமாரியாக பதிவிடப்படுகின்றன. இதை கட்டுப்படுத்தும் விதமாகவும், இதுபோன்ற பதிவுகளால் பாதிக்கப்படும் தனிநபர்களின் குறைகளை தீர்க்கவும், ஒன்றிய அரசு கடந்தாண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்ட சமூகவலைதள நிறுவனங்கள், குறைதீர்ப்பு அதிகாரி, உதவி அதிகாரி மற்றும் உத்தரவுகளை நிறைவேற்றுவதை கண்காணிப்பதற்கான அதிகாரிகளை, குறிப்பாக இந்தியாவை சேர்ந்தவர்களாக நியமிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. இந்நிலையில், இந்த குறைதீர்ப்பு அதிகாரிகளால் வழங்கப்படும் தீர்வுகளும் பாரபட்சமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, இதற்கு தீர்வு காணும் வகையில், ‘குறைதீர்ப்பு மேல்முறையீட்டு கமிட்டி’ என்ற புதிய அமைப்பை உருவாக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, தகவல் தொழில்நுட்ப வழிகாட்டு நெறிமுறை, டிஜிட்டல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர உள்ளது. இதன்படி, மேல்முறையீடு செய்யப்பட்ட 30 நாட்களில் இப்பிரச்னைக்கு மேல்முறையீட்டு கமிட்டி தீர்வு காண வேண்டும் என்ற கெடுவும் விதிக்கப்படுகிறது. இந்த சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.