குழந்தை கடத்தலில் ஈடுபடும் ரஷியா- ஜெலன்ஸ்கி பரபரப்பு குற்றச்சாட்டு

கீவ்:
ரஷிய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த போர் குறித்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
ரஷிய ராணுவம் உக்ரைனில் இருந்து 2 லட்சம் குழந்தைகளை கட்டாயமாக கடத்தி சென்றுள்ளது. கடத்தப்பட்ட இந்த குழந்தைகள் ரஷியாவின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த குழந்தைகளில் சிலர் பெற்றோர்களிடம் இருந்தும், குடும்பங்களில் இருந்தும் பிரிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்த கிரிமினல் திட்டத்தின் நோக்கம் குழந்தைகளை கடத்துவது மட்டுமல்ல, அவர்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பும்போது உக்ரைனை மறந்துவிடுவார்கள். மேலும் அவர்களால் திரும்பி வரவே முடியாது.
இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உக்ரைன் தண்டிக்கும், ஆனால் அதற்கு முன் போர்களத்தில், ‘உக்ரைனை யாரும் கைப்பற்ற முடியாது. நாங்கள் சரணடையமாட்டோம். எங்கள் குழந்தைகள் ஒன்றும் உடைமை கிடையாது’ என்பதை நாம் நிரூபிப்போம்.
இதுவரை இந்த போரினால் 243 குழந்தைகள் இறந்துள்ளனர். 446 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.