கேஜிஎப்.,க்கு போட்டியாக படம் இயக்கும் பா.ரஞ்சித்
இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு அடுத்தடுத்து வரிசையாக படங்கள் கையில் இருக்கிறது. கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படம், விக்ரம் நடிப்பில் ஒரு படம் என அடுத்தடுத்து படம் இயக்குகிறார். தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தை முடித்திருக்கிறார். இதில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதற்கு அடுத்து அவர் இயக்கும் கமலின் படம் மதுரையை கதை களமாக கொண்டது. விக்ரமை வைத்து இயக்கும் படம் கோலார் தங்கசுரங்கத்தை மையமாக கொண்டது. இதனை பா.ரஞ்சித் கேன்ஸ் பட விழாவில் தெரிவித்தார்.
19ம் நூற்றாண்டில் முதல்முறையாக கோலாரில் தங்கத்தை தோண்டி எடுத்த தமிழக சுரங்கத் தொழிலாளர்களைப் பற்றிய கதையாக உருவாகிறது. இந்தப் படம், பிரசாந்த் நீலின் கேஜிஎப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
தற்போது இயக்கி வரும் வேட்டுவம் படத்திற்கு பிறகு இதனை இயக்குகிறார். கேஜிஎப் படம் தங்க சுரங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய தாதாக்களின் கதையை கற்பனை கலந்து சொன்னார்கள். இந்த படத்தில் தங்க சுரங்கத்திற்கான உயிரையும், உழைப்பையும் கொடுத்த தமிழக தொழிலாளர்களை பற்றியது என்கிறார்கள்.