கோவை: தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தில் கேள்வி கேட்ட பேராசிரியரை நள்ளிரவில் விசாரித்த காவல்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார். கல்லூரிப் பேராசிரியரான இவர், மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில்,‘‘கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேள்விகளை கேட்டேன். அதற்கு பதில் கிடைத்தது. அதேசமயம், பேரூராட்சி ஊழியர் ஒருவர் எனக்கு மிரட்டல் விடுத்தார். அது தொடர்பாக க.க.சாவடி காவல் நிலையத்திலும், ஆட்சியரிடமும், காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தேன்.
சில நாட்கள் கழித்து, நள்ளிரவில் அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் ஆகியோர் எனது வீட்டுக்கு வந்து விசாரணை எனக்கூறி வெளியே அழைத்துச் சென்றனர். கேள்வி கேட்டதற்காக மிரட்டல் விடுக்கும் வகையில் என்னிடம் விசாரித்தனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், தமிழக உள்துறை முதன்மைச் செயலருக்கு நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. அதில், “மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட ரமேஷ்குமாருக்கு ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இத்தொகையை காவல் ஆய்வாளர்கள் தூயமணி வெள்ளைச்சாமி, மணிவண்ணன் ஆகியோரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரமும், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் இருந்து ரூ.50 ஆயிரமும் ஊதியத்தில் இருந்து வசூலிக்க வேண்டும். மேலும், 3 காவல்துறை அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.