குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி இந்த மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடைபெற உள்ளதாக இந்த விஷயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் ரெய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஜூன் மாத இறுதிக்குள் உடன்படிக்கை
ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைக்கு வருமென நம்புவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம், இலங்கை நிதி அமைச்சகம் மற்றும் மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர்கள் பதிலளிக்கவில்லை.
சுதந்திரத்தின் பின்னர் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் எரிபொருள் விலை, அத்தியாவசிய உணவுப் பொருளட்கள் மற்றும் மருந்து பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்க 4-1/2 ஆண்டுகள் சலுகைக் காலத்துடன் இந்தத் திட்டங்கள் பொதுவாக மூன்று ஆண்டுகள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்திய சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியது. ஆனால் எந்த வகையான வேலைத்திட்டம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடவில்லை.
நாட்டில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து மே மாதம் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 8% இலிருந்து 12% ஆக அதிகரிக்க வரிவிதிப்பு மறுசீரமைப்பை அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.