சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் ரம்யா பாரதியின் தனிப்படை போலீஸாருக்கு போதைப்பொருள் விற்பனை நடப்பது குறித்து ரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. அதன்பேரில் வடக்கு கடற்கரை போலீஸார், ராஜாஜி சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கின் அருகே நின்றுக் கொண்டிருந்த மூன்று பேரை போலீஸார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அப்போது மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது சுல்தான் (54), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுனைத் அலி (42), ஜாகீர் உசேன் (57) எனத் தெரியவந்தது. இவர்களை போலீஸார் சோதனை செய்தபோது போதைப்பொருள்களை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. மூன்று பேரும் அளித்த தகவலின்படி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அசாருதின் (39), நாசர் (52) ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிடமிருந்து 2 கிலோ போதைப்பொருள்கள், 5 போலி ஆதார் கார்டுகள், 5 போலி பான் கார்டுகள், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து ஆர்.கே.நகர் போலீஸார் கொருக்குப்பேட்டை ஹவுசிங்போர்டு பாரதி நகர்ப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு பைக்குகளில் நின்றுக் கொண்டிருந்த நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்களும் போதைப்பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள் புளியந்தோப்பைச் சேர்ந்த ரியாஸ் உசேன் (23), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சித்திக் முகமது (34), மண்ணடியைச் சேர்ந்த யாசீன் மெல்பர் (20), ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த அமித் ஆபிக் (21) எனத் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 60 கிராம் எடையுள்ள போதைப்பொருள்கள், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான ரியாஸ் உசேன்மீது கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. கைதானவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதுசெய்யப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் போலீஸிடம் சிக்காமலிருக்க போதைப்பொருள்களை வளையல் வைக்கும் நகை பெட்டியில் வைத்துக்கொண்டு சுற்றி திரிந்தனர். சந்தேகத்தின் பேரில் வளையல் பெட்டியை சோதனை செய்தபோதுதான் அதில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. வளையல் பெட்டிக்குள் வளையல்களும் இருந்தன. இவர்களின் செல்போன்களை ஆய்வு செய்தபோது சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் இந்த போதை கும்பலின் நெட்வொர்க்கை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் காலை நேரத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். மாலை நேரத்தில் போதைப்பொருள்களை விற்று வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.”