சொந்த ஊரிலேயே வேளாண் கருவிகள் பழுது பார்க்கும் மையங்கள் அமைக்கலாம்; அழைக்கும் வேளாண் பொறியியல் துறை!

விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை உற்பத்தி செய்வதில் இருந்து சந்தைப்படுத்தும் காலம் வரை ஏற்படும் இழப்பினை குறைக்க, வேளாண் விளைபொருட்களின் மதிப்பை கூட்டும் எந்திரத்தை வழங்கி வருவதோடு, வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையமும் மானிய விலையில் அமைக்கும் திட்டத்தை வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

‘சோலார்’ நீர் இறைக்கும் கருவி

இந்நிலையில் மானிய கருவிகள் வழங்கப்படுவது குறித்தும், பழுது பார்க்கும் மையம் அமைத்து தருவது குறித்தும் தலைமை பொறியாளர் முருகேசன் பேசியதாவது, “விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை அறுவடை செய்வதில் இருந்து சந்தை படுத்தும் வரை ஏற்படும் இழப்பினை குறைத்து, அப்பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் வகையில் ‘மதிப்புக்கூட்டும் எந்திரங்களை’ வேளாண்மைப் பொறியியல் துறை மானியத்துடன் வழங்க இருக்கிறது.

அதில் தானியம் அரைக்கும் இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், கால்நடை தீவனம் அரைக்கும் இயந்திரம், சிறிய வகை நெல் அரவை இயந்திரம், கேழ்வரகு சுத்தப்படுத்தி கல் நீக்கும் இயந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் இயந்திரம், நிலக்கடலை செடியிலிருந்து காய் பிரித்தெடுக்கும் இயந்திரம், நிலக்கடலை தோல் உடைத்து தரம் பிரிக்கும் இயந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு, வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, பாக்கு உடைக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் 40 சதவிகித மானியத்துடன் விவசாயிகள், விவசாய பயன்பாடு குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட உள்ளது.

செக்கு

மானியம் பெற விரும்புவோர் ஆதார் கார்டு, புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், சாதி சான்றிதழ், சிறு குறு விவசாயிக்கான சான்றிதழ், நிலம் சம்பந்தமான சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை விண்ணப்பத்தில் பதிவு செய்து அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளரை அணுகி தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். அதன் பின் வேளாண்மை பொறியியல் துறையின் உதவி செயற் பொறியாளர் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பத்தை பதிவு செய்வார்.

ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கு தகுந்தவாறு அந்தந்த உதவி செயற் பொறியாளர், வேளாண் பொறியாளர்களிடமிருந்து சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிறுவனம் மற்றும் மாடல்களை தேர்வு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் மொத்தத் தொகைக்கும் வங்கி வரைவோலை எடுக்குமாறு தெரிவிக்கப்படும். அதன்பின், வேளாண்மைப் பொறியியல் துறையால் விலை நிர்ணயம் செய்து ஒப்புதல் அளிக்கப்பட்ட நிறுவனங்களின் பட்டியலிருந்து, மதிப்புக் கூட்டும் இயந்திரங்களை விவசாயிகள் தங்கள் முழு விருப்பத்தின் அடிப்படையில் தேவையான தயாரிப்பு நிறுவனங்களையும், மாடல்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

தலைமைப் பொறியாளர் முருகேசன்

மேலும், வேளாண் இயந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையங்களையும் மானிய விலையில் அமைத்து தரும் திட்டத்தை வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது விவசாயிகள் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் சூரிய ஆற்றலால் இயங்கும் பம்ப்செட்டுகள் முதலியவை பழுதாகும் போது, வேளாண் பணிகள் தடைபட்டு போக வாய்ப்புண்டு. விவசாயிகள் எத்தகைய இடையூறுமின்றி வேளாண் பணிகளை தொடர்ந்து செய்திடவும், பழுதான எந்திரங்களை தங்கள் விளை நிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், அதோடு கிராமபுற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்து நிலையான வருமானத்தை அளிக்கவும் இம்மையங்கள் 8 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவிகித மானியத்தில் 4 லட்சம் வரை மையம் அமைக்க மானியம் வழங்கப்படும்.

டிராக்டர்

எனவே இம்மையங்களை அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், விவசாய குழுக்கள், தொழில் முனைவோர், உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற் பொறியாளரை அணுகி தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இது மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சி தலைவர் ஒப்புதல் அளித்த பின்னரே இம்மையம் மானியத்தில் அமைத்து கொடுக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.