சோனியா காந்திக்கு கொரோனா உறுதி… அமலாக்கத்துறை முன் ஆஜராவாரா?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

ரந்தீப் சுர்ஜிவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ” காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்தித்து பேசினார். அவர்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று மாலை சோனியா காந்திக்கு லேசான காய்ச்சலும், கொரோனா அறிகுறிகளும் தென்பட்டன. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சோனியா காந்தி உடல்நிலை குறித்து ஏரளாமான காங்கிரஸ்காரர்கள், பெண்கள் , நலம் விரும்பிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது சோனியா காந்தி குணமடைந்து வருவதாக தெரிவிக்க விரும்புகிறோம். விரைவாக மீண்டு வர வாழ்த்திய அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறோம்.

காங்கிரஸ் தலைவர் ஜூன் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜராவார் என்று முன்பே தெரிவிக்கப்பட்டுவிட்டது. வேறு ஏதெனும் தகவல்கள் இருந்தால், முறைப்படி இந்திய தேசிய காங்கிரஸ் தெரிவிக்கும்” என பதிவிட்டிருந்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ஜூன் 8 ஆம் தேதி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. ராகுல் காந்தி தற்போது இந்தியாவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அமலாக்கத்துறை முன் ஆஜராவார்கள் என கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சிகளை தாக்குவதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசாங்கம் தவறாக பயன்படுத்துவதாக அபிஷேக் மனு சிங்வி உட்பட பல தலைவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் – ஸ்டாலின்

இதற்கிடையில், கொரோனா தொற்றில் இருந்து சோனியா காந்தி விரைவில் பூரண குணமடைய வேண்டும். தொற்றுநோய் இன்னும் நீங்காததால், பொது வாழ்வில் உள்ள அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

சோனியா காந்தி இரண்டு தவணை கொரோனா தடுப்பூதி செலுத்திக்கொண்ட நிலையில், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.