ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன் கோரிக்கையை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தைக் கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசு தீர்மானம் எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரசின் முன்னாள் தலைவர் கே.வீ. தங்கபாலு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:
“ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
அதற்கு பதிலாக பின்தங்கிய மக்களுக்கு தனி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தற்போது, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் சட்டமன்றத்தைக் கூட்டி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று அறிவித்துள்ளனர். மத்திய அரசு எங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் மாநில அரசு நிறைவேற்றும் என்று பீகார் முதல்வர் நேற்று தெரிவித்துள்ளார், அதற்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தை கூட்டி அனைத்துக்கட்சியினரின் ஆதரவுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால், பீகார் அரசின் நிலைப்பாடை தமிழ்நாடும் எடுக்கவேண்டும் என்ற அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
தமிழகத்தில் 1967 இல் காங்கிரஸ் தோல்வியுற்றதற்கு பின்பும் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றி வருகின்றேன். இறுதி மூச்சு வரை காங்கிரஸ் கட்சியில் தான் இருப்பேன். எத்தனையோ பேர் காங்கிரசை விட்டு வெளியேறிய போது நான் வெளியேறவில்லை. இந்நிலையில் என்னை யாராலும் மாற்ற முடியாது, மாற்றுகிற வாய்ப்பையும் யாருக்கும் கொடுக்க மாட்டேன்.
இந்தியாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் எல்லா சமுதாய மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெறுவேன். தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து எனது கோரிக்கையை வலியுறுத்துவேன்” என்று கே.வீ.தங்கபாலு கூறினார்.