பிரபல அமெரிக்க நடிகையும், மாடலுமான ஆம்பர் ஹேர்ட் – நடிகர் ஜானி டெப் இடையேயான காதல் 2015-ல் திருமணத்தில் முடிந்தது. ஒன்றரை ஆண்டுகளிலே திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு, பின்னர் ஆம்பர் தொடர்ந்த வழக்கில் விவாகரத்துடன் இழப்பீடாக 7 மில்லியன் டாலரும் வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஷிங்டன் போஸ்டில் ஒரு கட்டுரை எழுதுகிறார். உலக அளவில் #metoo இயக்கம் பரவலாக இருந்த காலக்கட்டத்தில்தான் ஆம்பரின் கட்டுரையும் வெளி வந்தது. இதனால் இந்தக் கட்டுரை மிகுந்த கவனம் பெற்றது.
“பாலியல் வன்முறைக்கு எதிராகப் பேசுகிறேன்” என்ற தலைப்பில் ஆம்பர் எழுதிய கட்டுரை ஜானி டெப்புக்கு எதிராக பெரும் எதிர்வினையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் ஹாலிவுட் படங்களிலிருந்து நீக்கப்பட்டார்.
தன் மீது ஆம்பர் ஹேர்ட் பொய் புகார் தெரிவிக்கிறார் என்று கூறி ஜானி டெப், ஆம்பர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைதான் கடந்த மூன்று வாரங்களாக நடந்தது.
Law & Crime Network யூடியூப் சேனல் இருவரது தரப்பு வாதத்தை நேரடியாக ஒளிப்பரப்பு செய்தது. அமேசான் ப்ரைம் இவ்வழக்கின் வழக்கு விவாதத்தை எபிசோட்களாக வெளியிட்டுள்ளது. வழக்கின் விசாரணை பொழுபோக்கு நிகழ்ச்சியாகவே மக்களால் பார்க்கப்பட்டது.
இவ்வழக்கின் விசாரணை ஆரம்பத்திலிருந்தே ஆம்பர் ஹேர்ட்டுக்கு எதிராகத்தான் இருந்தது. மேலும், விசாரணையில் அவரது சில பதில்கள் முன்னுக்குபின் முரணாக இருந்தன. இதனால் ஆம்பர் ஹேர்ட் சமூக வலைதளங்களில் கடுமையாக கேலிக்கு உள்ளானார்.
விசாரணை முடிவில் பாலியல் துன்புறுத்தல், குடும்ப வன்முறையில் ஜானி டெப் ஈடுபட்டார் என்பதற்கு ஆம்பரிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததுடன், சுமார் 10 மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகையை ஆம்பர், ஜானி டெப்புக்கு வழங்கவும், 5 மில்லியன் டாலரை தண்டனை தொகையாக வழங்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தது குறித்து, “நீதிபதிகள் என் வாழ்க்கையை மீண்டும் அளித்திருக்கிறார்கள்… உண்மை என்றும் அழியாது. இந்த வழக்கு என் சூழலில் உள்ளவர்களுக்கும் (ஆண், பெண்) அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் நிச்சயம் உதவும் என்று நினைக்கிறேன்” என்று ஜானி டெப் தெரிவித்திருக்கிறார்.
ஜானி டெப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே “ஜானி… ஜானி… ஜானி” என்று குரல் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீர்ப்பு குறித்து ஆம்பர் ஹேர்ட் கூறும்போது, “இந்த தீர்ப்பு ஒரு பின்னடைவு. வெளிப்படையாக பேசும் பெண்களை இம்மாதிரியான தீர்ப்புகள் அவமானப்படுத்துகின்றன”என்றவர், இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம்பர் ஹேர்ட் மேல் முறையீடு செய்யவுள்ளார்.
> இது, ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்