கோபன்ஹேகன் : பின்லாந்து, போலந்து, பல்கேரியாவைத் தொடர்ந்து டென்மார்க் நாட்டிற்கும் இயற்கை எரிவாயு சப்ளையை ரஷ்யா நிறுத்தியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதனால், டாலருக்கு பதிலாக, ரஷ்யா அதன் ரூபிள் கரன்சி வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதில் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, ‘ஐரோப்பிய நாடுகள் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கான தொகையை, ரூபிள் கரன்சியில் செலுத்த வேண்டும்’ என, ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார்.
ஐரோப்பிய நாடுகள், 40 சதவீதம் இயற்கை எரிவாயு, 25 சதவீதம் கச்சா எண்ணெய் ஆகியவற்றை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்கின்றன.அதனால் ரஷ்யாவின் உத்தரவை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பல நாடுகள் ரூபிள் முறையில் பணம் செலுத்த மறுத்து விட்டன. இதையடுத்து, பின்லாந்து, போலந்து, பல்கேரியா நாடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளையை ரஷ்யா நிறுத்தி விட்டது. நேற்று, டென்மார்க் நாட்டிற்கும் எரிவாயு சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து டென்மார்க்கின் ஆர்ஸ்டெட் எண்ணெய் நிறுவனம் கூறுகையில் ‘இயற்கை எரிவாயு தேவையான அளவிற்கு உள்ளது. இனி ரஷ்யாவுக்கு பதிலாக ஐரோப்பிய சந்தையில் இயற்கை எரிவாயுவை வாங்குவோம்’ என தெரிவித்துள்ளது.
Advertisement