சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் கல்வி, இளைஞர் நலன் மற்றும் பகுதிகளை அழகுபடுத்துவத்தில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி தண்டையார் பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், தொற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ககன் தீப், துணை மேயர் மகேஷ் குமார், ராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் எபினேசர் ஆகியோர் கலந்து கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “இதுவரை 5 மண்டலங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடந்துள்ளது. இது 6-வது கலந்தாய்வு கூடடம். மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரச்சினைகளை முன்வைத்தனர். அனைத்தையும் கேட்டு அறிந்து அதற்கான தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
தண்டையார்பேட்டை மண்டலத்தை சென்னையின் மற்ற பகுதிகளை போலவே அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் மேம்படுத்திடவும். குழந்தைகள், இளைஞர் நலன் மற்றும் கல்வி, பொது சுகாதாரம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங், “பக்கிங்காம் கால்வாய் பொறுத்தவரை ஆகாய தாமரையை அகற்ற மருந்து உபயோகித்தால் பிரச்சினைகள் வரும். அதனால் அதனை உபயோகப்படுத்துவதில்லை. இயந்திரங்கள் மூலமாகவே அகற்றப்படுகிறது. பொது சொத்துக்கள் மீது போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க கூறி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.