சேலம் அருகே மளிகை கடை உரிமையாளர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை, ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பட்டை கோவில் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜெயராமன். வட மாநிலத்தை சேர்ந்த வியாபாரியான இவர், இன்று அதிகாலை வழக்கம் போல கடையை திறந்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.
அப்போது திடீரென கடைக்குள் புகுந்த 6 பேர் கொண்ட வட இந்திய மாநிலத்தை சேர்ந்த கும்பல், ஜெயராமனை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக காரில் கடத்தி செல்கின்றனர்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து உடனடியாக ஜெயராமனின் பெற்றோருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து ஜெயராமனின் பெற்றோர்கள் சேலம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், விரைந்து வந்த சேலம் மாநகர காவல் துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, மர்மநபர்களை பிடிப்பதற்கு தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இந்த கடத்தல் சம்பவம் தொழில் போட்டி காரணமாக நடைபெற்றதா? அல்லது முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.