நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக, பா.ஜ.க முன்னாள் எம்.பி சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜூன் 8-ல் நேரில் ஆஜராகுமாறு, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான ரன்தீப் சுர்ஜேவாலா, “இது பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியல், இத்தகைய மிரட்டல்களுக்குப் பயப்பட மாட்டோம்” என பா.ஜ.க-வை சாட்டியிருந்தார். இந்த நிலையில், ரன்தீப் சுர்ஜேவாலா-வின் இத்தகைய கருத்துக்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அனுராக் தாகூர், “அரசு நிறுவனங்கள் தங்கள் வேலையைச் செய்கின்றன. இதுவொன்றும் அமைச்சரவை முடிவுகளுடன் தொடர்புடையது அல்ல. அதுமட்டுமல்லாமல், தவறு செய்யவில்லையென்றால் எதிர்க்கட்சிகள் கவலைப்பட வேண்டாம்” என கூறினார்.
இதேபோல் சென்ற வாரம், ஜம்மு காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்க நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜரான ஃபரூக் அப்துல்லா, “தேர்தல் நடக்கும் வரை அவர்கள் எங்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்கள்” என மத்திய அரசை சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.