கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்துக்கு பள்ளி விடுமுறைக்காக சிறுவர்கள் சிலர் தங்களின் பாட்டி புஷ்பா என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். வீட்டுக்கு வந்திருந்த தனது பேரப் பிள்ளைகளை மூதாட்டி புஷ்பா, பெருமுக்கலில் அமைந்துள்ள செயல்படாத கல்குவாரி குட்டைக்கு குளிப்பதற்காக அழைத்து சென்றுள்ளார். அந்த சமயத்தில் குழந்தைகள் 3 பேரும் அடுத்தடுத்து குட்டையில் தவறி விழுந்துள்ளனர்.
இதை பார்த்து செய்வதறியாது திகைத்த மூதாட்டி புஷ்பா பேரக்குழந்தைகள் 3 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் இதில் அவரும் தவறி விழுந்ததில் 4 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி புஷ்பா (வயது 60), வினோதினி (16), ஷாலினி (14), கிருஷ்ணன் (8) ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பலியான 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குட்டையில் மூழ்கி பேரக்குழந்தைகள் 3 பேருடன் மூதாட்டி பலியான சம்பவம் பெருமுக்கல், களவாய் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்கலாம்: 2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை -திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் கிணற்றில் பிணமாக மீட்புSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM