சென்னை: திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட உள்ளது.
கிரிவல பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். மேலும் கால்வாய் அமைந்துள்ள அப்பகுதியில், கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் தமிழக அரசுத் தரப்பில், சிலை அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த நிலம் பட்டா நிலம். அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவர் யார் என்ற விவரங்களை கூறாமல், சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தாக்கல் செய்துள்ள இந்த பொது நல வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் எனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பிரதான வழக்கு மற்றும் தடை நீக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் முகமது ரபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் நிலமாக இருந்தாலும் சிலை வைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. எனவே இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளது எனக் கூறி விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
மேலும், நாளை நடத்தவிருந்த சிலை திறப்பு விழாவை வேறு தேதிக்கு மாற்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதனால், கருணாநிதி சிலை திறக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடர்கிறது.