சென்னை: தேசிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை, மத்திய அரசால் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், கரோனா பரவலால் அதன் அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில் தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை அமல்படுத்துவதில் மத்திய கல்வி அமைச்சகம் தீவிரம் காட்டிவருகிறது.
ஆனால், தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. அதற்கு மாற்றாக மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கையை வடிவமைக்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
2 நாள் தேசிய மாநாடு
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மாநில கல்வி அமைச்சர்களின் 2 நாள் தேசிய மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் நேற்று தொடங்கியது. மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், பள்ளிகளில் டிஜிட்டல் கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.
இதனிடையே, இந்த மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருவரும் மாநாட்டை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பான பணிகளை முன்னெடுப்பதே இந்த தேசிய மாநாட்டின் நோக்கம். தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பில் தமிழக அரசு உறுதியாக இருப்பதால், தனது நிலைப்பாட்டை உணர்த்தும் விதமாக மாநாட் டில் பங்கேற்காமல் அமைச்சர்கள் புறக்கணித்துள்ளனர்’’ என்றனர். இந்த மாநாடு இன்றுடன் (ஜூன் 2) நிறைவு பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.