வன்புணர்வு குற்றச்சாட்டால் தலைமறைவான மலையாள நடிகர் விஜய் பாபு பொலிஸார் முன்பு ஆஜராகி பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகை ஒருவர் சமீபத்தில் நடிகரும், தயாரிப்பாளருமான விஜய்பாபு தன்னை வீட்டிற்கு அழைத்து, போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வு செய்ததாக அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நடிகையின் புகாரை ஏற்ற பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது குறித்த நடிகையின் பெயர் மற்றும் விபரங்களுடன் விஜய்பாபு சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டார்.
இதனால் விஜய்பாபு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான விஜய்பாபு, முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், இரண்டாம் திகதி வரை விஜய்பாபுவை கைது செய்ய தடையும் விதித்தது.
இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள் முன்பு ஆஜரான விஜய்பாபு தன் மீது நடிகை கூறிய பாலியல் குற்றச்சாட்டை மறுத்தார்.
விசாரணையில் அவர் கூறுகையில், ‘அந்த நடிகையை எனக்கு முன்பே தெரியும். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரது சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம்.
எனது படங்களில் நடிக்க நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் என் மீது புகார் கூறியுள்ளார்.
இது வேண்டுமென்றே கூறப்பட்ட புகார். எனது தொழில் எதிரிகளால் புனையப்பட்ட வழக்கு. இது தொடர்பான விசாரணைக்கு நான் பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், நடிகையுடன் வாட்ஸ்அப்பில் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் ஒப்படைத்துள்ளார். அந்த தகவல்களை பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.