சென்னை: தொன்மை வாய்ந்த ரிப்பன் மாளிகை இரவில் வண்ணமயமாக ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின் விளக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை 109 ஆண்டு கால பழமையான கட்டடம். தொன்மை வாய்ந்த ரிப்பன் மாளிகையில், சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின்போது, தேசிய கொடியை குறிக்கும் வகையிலான வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும். அதேபோல், மார்பக புற்றுநோய் தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளஞ்சிவப்பு நிறத்தில் விளக்குகளால் அலங்கரிக்கப்படும்.
ரிப்பன் மாளிகையை விளக்குகளால் அலங்கரிக்கும் போதெல்லாம், அவற்றை பார்வையிட பொதுமக்கள் அதிகளவில் கூடுவது வழக்கம். மேலும், பூந்தமல்லி நெடுஞ்சாலை செல்லும் வாகனங்களும், வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட ரிப்பன் மாளிகையின் அழகை ரசித்துக் கொண்டே செல்வர்.
எனவே, 1.81 கோடி ரூபாய் செலவில் ரிப்பன் மாளிகையில் நிரந்தரமாக வண்ண விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அமைக்கப்பட்ட அலங்கார மின் விளக்குகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு சர்வதேச தினத்திற்கு ஏற்ப, அந்நிறத்தை குறிக்கும் வகையில் ரிப்பன் மாளிகை மின் விளக்குகள் ஒளிரூட்டப்படும். மேலும், ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மை மற்றும் பசுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெள்ளை மற்றும் பச்சை நிறத்திலும் மின் விளக்குகள் அலங்கரிக்கப்படும்.
இந்த விளக்குகள் தினசரி மாலை 6:30 முதல் 11:00 மணி வரை ஒளிரூட்டப்படும். அதன்படி தினசரி 800 ரூபாய் வரை மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில் ஒளிரூட்டப்படும் நேரம் அதிகரிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.